எடப்பாடி பழனிசாமி தரப்புடன் சேர மாட்டோம்… பண்ரூட்டி ராமச்சந்திரன் உறுதி
Share
டில்லியிலிருந்து பாஜக வலியுறுத்தினாலும் எடப்பாடி பழனிசாமியுடன் சேர மாட்டோம் என்று பண்ரூட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், பண்ரூட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பேசிய பண்ரூட்டி ராமச் சந்திரன், ‘நம்மிடையே ஒற்றுமை இருக்க வேண்டும். ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்திய போது நாட்டுமக்கள் ஆதரவு அளித்தார்கள். எதிர் தரப்பு ஒன்று சேருங்கள் என்று சொன்னார்கள். சேர்ந்ததால் என்ன நன்மை கிடைத்தது? ஒரு முறை கூட்டு சேர்ந்து அனுபவித்த கொடுமையை ஓ.பன்னீர் செல்வம் நன்கு அறிவார். எடப்பாடி பழனிசாமி தரப்புடன் ஒற்றுமை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஓ.பன்னீர் செல்வம் தான் ஒருங்கிணைப்பாளர்.
எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் உள்ள நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். திரும்ப கொண்டு வந்து சேர்க்க கட்சியின் அடிப்படை தொண்டர்களுக்கு தான் உரிமை உள்ளது. எடப்பாடி தரப்புடன் இனி ஒட்டோ உறவோ கிடையாது. எடப்பாடி பழனிசாமி, அவரது மாவட்ட செயலாளர்கள், அவர்களின் பொதுக்குழு உறுப்பினர்கள் தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். எடப்பாடியுடன் சேர வேண்டும் என யார் சொன்னாலும் டில்லி சொன்னாலும் சேர மாட்டோம். டி.டி.வி.தினகரனுடன் சேர்ந்து பயணிக்கிறோம். விரைவில் சசிகலாவை சந்திக்கவுள்ளோம். சசிகலா இதுவரை அனுமதி தரவில்லை. அவர் அனுமதிதந்தால் பார்ப்போம். பாஜகவுடன் தோழர்களாக இருக்கலாம். தொண்டனாக இருக்க முடியாது. அவர்கள் தயவுசெய்து காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று தெரிவித்தார்.













