டில்லியில் மோடியின் இல்லம் அருகே பறந்த ட்ரோன்? – காவல்துறை விசாரணை
Share
டில்லி, ஜூலை 4- டில்லியில் பிரதமர் மோடியின் இல்லம் அருகே டிரோன் பறந்ததாக எழுந்த புகார் குறித்து டில்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைநகர் டில்லியில் லோக் கல்யாண் மார்க்கில் பிரதமர் மோடியின் இல்லம் அமைந்துள்ளது. அதிகாலை 5 மணியளவில் பிரதமரின் இல்லம் அருகே டிரோன் பறந்ததாக புகார் எழுந்தது. டில்லி மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு இது தொடர்பாக தொலைபேசி அழைப்பு வந்தது. டிரோன் பறப்பதாக கிடைத்த தகவலை அடுத்து உடனடியாக தேடும் பணியில் டில்லி காவல்துறையினர் ஈடுபட்டனர். விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துக்கு தொடர்புகொண்ட அதிகாரிகள், எந்த டிரோனோ அல்லது வேறு பறக்கும் விமானங்கள் பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளனர். டிரோன் பறந்ததாக தகவல் அளித்தது யார் என்பது குறித்து விசாரணையிலும் காவல்துறையினர் ஈடுபட்டனர். உச்சபட்ச பாதுகாப்பு உள்ள பிரதமரின் இல்லம் அருகே டிரோன் பறந்ததாக எழுந்த புகார் தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













