நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை… அமைச்சர் அதிரடி அறிவிப்பு
Share
சென்னையில் நியாயவிலைக் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
தக்காளி விளைச்சல் பாதிப்பால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையானது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனினும் தக்காளி விலை கட்டுக்குள் வராததால் இல்லத்தரசிகள் கவலையடைந்தனர்.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் உள்ள 82 நியாய விலைக் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அறிவித்தார். நியாய விலைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும், தேவைக்கு ஏற்ப தக்காளி விற்பனை செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். வேளாண் விற்பனை மையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து தக்காளி கொள்முதல் செய்ய அரசு பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.













