“மெகா கூட்டணி அமைத்தாலும் பாஜக வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” – வானதி சீனிவாசன்
Share
பாஜக பெரும்பான்மை பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கப் போவதை யாராலும் தடுக்க முடியாது என பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது: ‘அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்குவதில் திமுக முனைப்பாக இருக்கிறது. அகில இந்திய தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் என்னை சந்தித்து வருகின்றனர். அவர்களிடம் பாஜகவுக்கு எதிராக ஒரே அணி அமைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். இதனால்தான் திமுக அமைச்சர்களை குறி வைக்கிறார்கள்’ என, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். திமுக என்ற அரசியல் கட்சி தொடங்கிய காலம் முதலே, எங்களைப் பார்த்து இந்தியாவே மிரள்கிறது, நேருவின் தூக்கத்தையே கெடுத்து விட்டோம் என்று வெறும் வார்த்தை ஜால அரசியலைதான் செய்து வருகிறது.
பொய்யும், புரட்டும் நொடிக்கு நொடி அம்பலத்திற்கு வந்து விடும் இந்த தொழில்நுட்ப யுகத்திலும், இந்த வெற்றுக் கூச்சல் அரசியலை திமுக கைவிடவில்லை என்பதையும் ஸ்டாலினின் பேட்டி உணர்த்துகிறது. தமிழகத்தை தாண்டி தேர்தலில் போட்டியிடவே முடியாத திமுகவை பார்த்து இமயம் முதல் குமரி வரை வெற்றிகளை குவித்து வரும் பாஜக ஏன் பயப்பட வேண்டும்? புதுச்சேரி உள்பட 40 தொகுதிகள் இருந்தாலும் திமுகவால் அதிகபட்சம் 25 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடவே முடியாது.
இப்படிப்பட்ட கட்சியைப் பார்த்து ஒவ்வொரு தேர்தலிலும் 450 தொகுதிகளுக்கும் மேல் போட்டியிடும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே பெரிய அரசியல் கட்சியான பாஜகவுக்கு என்ன பயம் இருக்கப் போகிறது? பாட்னா கூட்டத்தில் தென்னிந்தியாவில் இருந்து திமுக மட்டுமே கலந்து கொண்டுள்ளது. 80 தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் இருந்து சமாஜ்வாடி மட்டுமே கலந்து கொண்டுள்ளது. காங்கிரஸுடன் கூட்டணி வைத்ததால் பிளவுபட்டதுடன், இந்துத்துவ வாக்கு வங்கியையும் இழந்துள்ள உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவால் என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? இப்போதும் மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பிளவுபட்டுள்ளது.
எனவே, பாஜகவை பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு, திமுகவைப் பற்றி ஸ்டாலின் அவர்கள் கவலைப்படுவதே சரியாக இருக்கும். ஏனெனில், வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கப்போவதை யாராலும் தடுக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.













