LOADING

Type to search

உலக அரசியல்

மலேசிய இந்திய சமூகம் கைவசமிருந்த நாடாளுமன்ற-சட்டமன்றத் தொகுதிகளை ஒவ்வொன்றாக இழந்துவருகிறது

Share

நக்கீரன்

கோலாலம்பூர், ஜூலை 09:

அடுத்த 10 ஆண்டுகளில் மலேசிய இந்தியர்கள் உரிமையையும் தன்மானத்தையும் இழக்கநேரிடும்.

சமூக ஆர்வலர் ‘உங்கள் சகோ.’ மணிமாறன் வெளிச்சம்

மலேசிய இந்திய சமுதாயம், கைவசம் இருந்த நாடாளுமன்ற-சட்டமன்றத் தொகுதிகளை ஒவ்வொன்றாக இழந்து வருகிறது.

மலேசியாவின் இன்றைய அரசியல் போக்கும் இந்திய சமுதாயத்தின் நிலையும் இப்படியேத் தொடர்ந்தால் இன்னும் பத்து ஆண்டுகளில், அடுத்த இரண்டு பொதுத் தேர்தலுக்குப் பின் இந்தியர்கள் தங்களின் உரிமையையும் தன்மானத்தையும் இழக்க நேரிடும் என்று சமூக ஆர்வலர் ‘உங்கள் சகோ’ மணிமாறன் கோடிக்காட்டியுள்ளார்.

இதன் தொடர்பில் முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில், 222 இருக்கைகளைக் கொண்டிருக்கும் மலேசிய நாடாளு-மன்றத்தில், இந்திய வாக்காளர்களை பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதி ஒன்றுகூட இல்லை;

இந்த நிலையில், 35 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் சபா சிறுபான்மையினர் 25 இடங்களை நாடாளுமன்றத்தில் கொண்டிருக்கின்-றனர்; அதைப்போல, 26 இலட்ச மக்கள்தொகையினராக இருக்கும் சரவாக் மாநில சிறுபான்மையினருக்கும் மலேசிய நாடாளுமன்றத்தில் 31 இடங்கள் உள்ளன.

இதன்படி பார்த்தால், தீபகற்ப மலேசியாவில் 23 லட்சமாக இருக்கும் இந்தியருக்கு 28 இடங்கள் நாடாளுமன்றத்தில் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இல்லை; ஏன் இந்த நிலை நமக்கு ஏற்பட்டது.

1963-இல் போர்னியோ மண்டலத்தைச் சேர்ந்த சபா, சரவாக் மாநிலங்கள் இணைந்து புதிய மலேசியா உருவானபோது, சபா-சரவாக் மாநிலங்களின் அன்றையத் தலைவர்கள், மலேசிய நாடாளுமன்றத்தில் தங்களுக்கான பிரதிநிதித்துவ உரிமையை உறுதியுடன் நிலைநாட்டினர்.

அதேவேளை, மெர்டேக்கா காலக்கட்டத்தில் மூவினங்களும் இணைந்த ஒப்பந்தம் உருவானபோது, நம் தாய்க்கட்சியின் அன்றைய தலைமை கோட்டைவிட்டது என்பதுதான் உண்மை; அதன் பிரதிபலிப்பைத்தான் இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்; கடந்த 4 தலைமுறைகளாக தொடர்ந்து பின்னுக்கு தள்ளப்படுகிறோம் என்று மலேசிய இந்திய சமுதாயத்தின் உரிமைகுறித்து மணிமாறன் ஆதங்கப்பட்டிருக்கிறார்.

இப்போதும், மலேசிய இந்தியர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்; ஆனால், அவர்கள் இந்திய சமுதாயத்தின் பிரதிநிதிகளாக இல்லை; பல இனக் கட்சிகளின் உறுப்பினர்களாக இருப்பதால், அவர்கள் அந்தந்த கட்சியின் நிலைப்பாட்டைதான் எடுக்கின்றனர். அதனால்தான், இந்திய சமுதாய பிரதிநிதி தான் இல்லை என்றும் என்னையே எல்லாவற்றுக்கும் நம்பி இருக்க வேண்டாம் என்று ஒரு பல்லினக் கட்சியின் எம்பி மேடைக்கு மேடை பேசுகின்றார்.

இந்திய சமுதாயத்தை நேரடியாக பிரதிநிதிக்கும் உறுப்பினர் என ஒருவரும் இல்லாத நிலையில், தலைவர்களும் சொந்த ஆதாயந்தேடிகளாக இருக்கின்றனர். இந்திய சமுதாயத்தின் உரிமைக்காகவும் நலனுக்காவும் குரல்கொடுக்க எவரும் இல்லாததால், கைவசம் இருக்கின்ற நாடாளுமன்ற தொகுதி ஒவ்வொன்றாக இந்திய சமுதாயத்தை விட்டு செல்வதைக் கண்டு வருகிறோம்.

இந்தியரின் பாரம்பரிய தொகுதியாக இருந்த காப்பார் இன்று கைமாறிவிட்டது; அதைப்போல கேமரன் மலை, தெலுக் கெமாங் தொகுகளும் இந்திய சமுதாயத்தைவிட்டு சென்றுவிட்டன. தெலுக் கெமாங் தொகுதிக்கு மாற்றாக வந்த போர்ட்டிக்சன் தொகுதியும் போய்விட்டது. இவற்றைப் போல கோத்தா ராஜா தொகுதியையும் இந்திய சமுதாயம் இழந்துவிட்டது

ஹிண்ட்ராஃப் எழுச்சிக்குப் பின், 2008 பொதுத் தேர்தல் முதல் இந்தியர் வசமிருந்த பாடாங் செராய் தொகுதியும் இப்பொழுது கைநழுவிவிட்டது. அதேக் கெடா மாநிலத்தில் லூனாஸ் சட்டமன்ற தொகுதி இந்திய சமுதாயத்தைவிட்டு சென்றுவிட்டது, நடைபெற இருக்கிற சட்டமன்றத் தேர்தல் மூலம் நெகிரியில் ஜெரம் பாடாங் தொகுதியும் முதலை வாயில் சிக்கிய விலங்கின் நிலைக்கு ஆளாகிவிடும்.

இவ்வளவு உரிமை இழப்புக்கும் சமுதாய பின்னடைவுக்கும் காரணம், சமூக உணர்வு இல்லாத இரைதேடித் தலைவர்கள் பதவியில் இருப்பதுதான். இதிலிருந்து விடுபடவும் தங்களின் எதிர்காலம் மறுமலர்ச்சி பெறவும் இந்திய சமுதாயம் விரும்பினால், இருக்கும் ஒரேவழி, ஒரு நல்ல தலைவரை அடையாளம் காண்பதுதான் என்று ‘உங்கள்சகோ’ புகழ் மணிமாறன், அந்தக் காணொளியில் மேலும் தெரிவித்துள்ளார்.