LOADING

Type to search

இந்திய அரசியல்

மத அவதூறில் கைதான ‘கனல்’ கண்ணன் பாளை சிறையில் அடைப்பு

Share

இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநில தலைவரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான ‘கனல்’ கண்ணன் சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் வெளிநாட்டு மத கலாச்சாரத்தின் உண்மை நிலை இதுதான் என்று கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் இளம்பெண்ணுடன் ஆடுவது போன்ற ஒரு வீடியோவை எடிட்டிங் செய்து பின்னணியில் தமிழ் இசையுடன் பதிவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ‘கனல்’ கண்ணன் பதிவு செய்திருந்த வீடியோ ஒட்டுமொத்த கிறிஸ்தவ மதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திட்டுவிளையை சேர்ந்த ஆஸ்டின் பெனட்(58) என்பவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி இந்திய தண்டனை சட்டப்பிரிவு 295 (ஏ), 506(ii) ஆக வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு வருமாறு கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் ‘கனல்’ கண்ணனுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதை எடுத்து நேற்று (10ம் தேதி ) காலை 10 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட எஸ்.பி அலுவலக வளாகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ‘கனல்’ கண்ணன் ஆஜர் ஆனார். காலை 10 மணியில் இருந்து அவரிடம் விசாரணை நடந்தது.

மதியம் 2 மணியளவில் விசாரணை முடிவடையாத நிலையில் போலீசார் வேண்டுமென்றே விசாரணையை தாமதம் செய்வதாக கூறி இந்து முன்னணியினர் சைபர் கிரைம் காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதையடுத்து வெளியே வந்த ‘கனல்’ கண்ணனை மீண்டும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது போலீசாருக்கும் இந்து முன்னணி நிர்வாகிகள் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் விசாரணைக்கு பின் மாலையில் ‘கனல்’ கண்ணனை கைது செய்தனர். அவரை நாகர்கோவில் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் எண்-2 ல் ஆஜர்படுத்தினர். ஒரு வாரம் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு ‘கனல்’ கண்ணனை கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனை முடிந்து இன்று (ஜூலை 11) அதிகாலை 1 மணியளவில் ‘கனல்’ கண்ணன், பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.