ஜெயலலிதாவின் சொத்துக்கு உரிமை கோரி தீபா, தீபக் தொடர்ந்த மனு தள்ளுபடி
Share
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை உரிமை கோரி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தீபா மற்றும் தீபக் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விரைவில் ஏலம் விட வேண்டும் என பெங்களூருவை சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்மமூர்த்தி வழக்கு தொடர்ந்த நிலையில் மேற்கொண்ட சொத்துக்களை ஏலம் விட கர்நாடக அரசு அரசு தரப்பு வழக்கறிஞரை நியமனம் செய்தது. இதை அடுத்து சொத்துக்கள் ஏலம் விடும் பணி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மூலமாக வேகம் எடுத்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட கூடாது அந்த சொத்துக்களுக்கு தீபா மற்றும் தீபக் ஆகியோர் தான் வாரிசு என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆகையால் இந்த சொத்துக்களை எங்களுக்கு வழங்க வேண்டும் என தீபா தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சொத்துக்களுக்கு உரிமை கோரி தீபா தரப்பில் பல உச்ச நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்பை ஆதாரங்களாக எடுத்துரைத்து வாதங்கள் எடுத்து வைக்கப்பட்ட நிலையில் அரசு தரப்பில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட காரணத்தினால் இந்த சொத்துக்களை வாரிசுகளுக்கு வழங்க இயலாது என லஞ்ச ஒழிப்பு சார்பில் அரசு தரப்பு வழக்கறிஞர் கிரண் எஸ் ஜவளி வாதத்தை முன் வைத்தார். இந்த மனு மீது சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.ஏ மோகன் சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை வாரிசுதாரர்கள் உரிமை கோர முடியாது என தீர்ப்பு வழங்கி தீபா மற்றும் தீபக் இருவரின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.













