LOADING

Type to search

இந்திய அரசியல்

போதைப்பொருள் கடத்தியவருக்கு 6 வருடங்களின் பின் மரண தண்டனை : நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு!

Share

(12-07-2023)

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி விற்பனைக்காக 1 கிலோ 135 கிராம் தூய்மையான ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு சென்ற குடும்பஸ்தருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09 திகதி வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, வவுனியா பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஷ தலைமையில் பொலிசார், அன்றைய தினம் இரவு 8.30 மணியளவில் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பு யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்துகளைசோதனையிட்டனர்.

இதன் போது பேருந்து ஒன்றில் பயணித்த குடும்பஸ்தர் தன் வசம் உடமையில் வைத்திருந்த பை ஒன்றில் இருந்து ஹெரோயின் போதைப் பொருள் கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஹெரோயின் போதைப் பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த குடும்பஸ்த்தரும் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றது விளக்கமறியலில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டார்.

குறித்த வழக்கு விசாரணையில் குறித்த நபர் ஒரு கிலோ 135 கிராம் தூய ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனைக்காக எடுத்து சென்றமை என்பன எந்தவித சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்ட மையால் குறித்த நபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரண தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்தார்.

யாழ் நாவற்குழியை சேர்ந்தவரும், தற்போது வவுனியாவில் வசித்து வருபவருமான கந்தையா தியாகராஜா என்ற 55 வயது குடும்பஸ்தருக்கே 6 வருடங்களின் பின் இவ்வாறு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.