LOADING

Type to search

இந்திய அரசியல்

‘வீட்டிற்கொரு புத்தகச்சாலை’ என்பது மெய்ப்பட உழைப்போம்’ முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

Share

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில், ‘வீட்டிற்கோர் புத்தகச்சாலை’ என்று பேரறிஞர் அண்ணா சொன்னது மெய்ப்பட உழைப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

“கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாளான இன்று, நங்கநல்லூர் நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவில் பங்கேற்று, அவரது புகழைப் போற்றினேன்.

அறிவியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக 2017-இல் பொறுப்பேற்றது முதல், என்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்துகளையும் பொன்னாடைகளையும் தவிர்த்து, புத்தகங்களை அளித்திடச் சொல்லியிருந்தேன். அதன்படி என்னை வந்தடைந்த புத்தகங்களில் ஒன்றரை இலட்சம் புத்தகங்களை தமிழகத்தின் பல்வேறு நூலகங்களுக்கும், என்னிடம் புத்தகங்கள் வேண்டி கடிதம் எழுதியவர்களுக்கும் அளித்துள்ளேன்.
அதன் தொடர்ச்சியாக, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில், கலைஞர் அறிவித்த கல்வி வளர்ச்சி நாளில் 7740 புத்தகங்களைப் பொது நூலகத்துறைக்கு வழங்கினேன்.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள், கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு நாள் என இந்நாளில், ‘வீட்டிற்கொரு புத்தகச்சாலை’ என்று பேரறிஞர் அண்ணா சொன்னது மெய்ப்பட உழைப்போம்.”

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முன்னதாக, நங்கநல்லூர் நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பெருந்தலைவர் காமராசரின் திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, சென்ற கல்வியாண்டில் (2022-23) சிறப்பாக செயல்பட்ட நங்கநல்லூர், நேரு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளின் 12ம் வகுப்பைச் சேர்ந்த 6 மாணவ, மாணவிகளுக்கு 60 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத் தொகையும், 10ம் வகுப்பைச் சேர்ந்த 6 மாணவ, மாணவிகளுக்கு 44 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத் தொகையும் முதல்வர் வழங்கி வாழ்த்தினார்.
மேலும், நேரு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் 777 மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலம்-தமிழ் அகராதிகளை வழங்கிடும் அடையாளமாக 4 மாணவ, மாணவிகளுக்கு அகராதிகளையும், பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசுப் பொருட்களையும் முதல்வர், வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, தன்னைச் சந்திக்க வருபவர்கள் அன்புப் பரிசாக வழங்கிய 7,740 புத்தகங்களை பள்ளிக்கல்வித் துறையின் பொது நூலகப் பயன்பாட்டிற்காக வழங்கிடும் விதமாக அப்புத்தகங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் முதல்வர் வழங்கினார்.