தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – வானதி ஸ்ரீனிவாசனுக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் போராட்டம்
Share
கோவையில் தெற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசனைக் கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடம் பகுதியில் தெற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசனை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் சிநேகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும் வானதி சீனிவாசனைக் கண்டித்து கோசங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளரிடம் பேசிய சிநேகன், ‘கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுள்ளார். இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டன ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இது தொடக்கம் தான்.
தொடர்ந்து அவர்கள் களப்பணியை தொடங்கவில்லையென்றால் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம். இதே போல தமிழகம் முழுவதும் தேர்தல் வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதைக் கண்டறிந்து அங்கெல்லாம் விழிப்புணர்வு பேரணி, போராட்டங்கள் நடத்துவோம். கமலஹாசன் போட்டியிட்ட தொகுதி என்பதால் மட்டும் இங்கு போராட்டம் துவங்கவில்லை. தேர்தல் நேரத்தில் உற்று கவனிக்கப்பட்ட ஒரு தொகுதி என்பதால் துவங்கப்பட்டுள்ளது. கமலஹாசன் கோவையில் போட்டியிடுவாரா? கூட்டணி உள்ளதா? என்பது குறித்து முடிவு எடுக்க இன்னும் காலம் உள்ளது. கூடிய விரைவில் அறிவிக்கிறோம் எனத் தெரிவித்தார். மேலும் யாராக இருந்தாலும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அது தான் ஜனநாயகம். இது குறித்த கேள்வி கேட்கும் அரசியல் கட்சியாக மக்கள் நீதி மய்யம் தற்போது போராட்டங்களை துவக்கியுள்ளது’ என்று தெரிவித்தார்.













