LOADING

Type to search

இந்திய அரசியல்

குமரியில் மகனை கொன்று தம்பதி தற்கொலை; உருக்கமான தகவல்கள்

Share

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் முகிலன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முரளீதரன்(40) சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் தக்கலை அருகே கரைக்கண்டார்கோணம் பகுதியை சேர்ந்த கோபாலன் மகள் சைலஜாவை 2013ல் திருமணம் செய்து கொண்டார். பெங்களூருவில் வேலை பார்த்து வந்த முரளீதரன் கொரோனாவுக்கு பின்னர் வீட்டிலிருந்து வேலை செய்து வந்தார்.

இவர்கள் கரைக்கண்டார்கோணத்தில் வீடு கட்டி குடியிருந்து வந்தனர். இவர்களுக்கு 7 வயதில் ஜீவா என்ற மகன் உண்டு. இவர்களுக்கு ஷைலஜாவின் தந்தை கோபாலன் பால் கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். ஜூலை 22 அன்று காலை பால் கொண்டு வந்த போது கதவு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் வாசலில் பாலை வைத்துவிட்டு சென்றார். பின்னர் மாலை வந்து பார்த்தபோது பால் அப்படியே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஆட்டோ டிரைவர் ஒருவரை உதவிக்கு அழைத்து கதவை உடைத்து பார்த்தார். அப்போது வீட்டினுள் 3 பேரும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து தக்கலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தக்கலை டி.எஸ்.பி உதயசூரியன், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். வீட்டின் முன்பக்க ஹாலில் முரளீதரனும், படுக்கை அறையில்
ஷைலஜாவும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டனர். படுக்கையறையில் கட்டிலில் மகன் ஜீவாவின் முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடிய நிலையில் இறந்து கிடந்தது. 3 பேர் உடலை மீட்டு போலீசார் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் வீட்டிலிருந்து கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதில் குழந்தையை கொன்றுவிட்டு கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மகன் ஜீவா ஆட்டிசம் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் அவரது நோய் பாதிப்பின் தீவிரம் குறைந்தபாடில்லை. இதனால் கணவன் மனைவி இருவரும் கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்புற்ற இருவரும் தங்களுக்கு பின் மகனுக்கு யாரும் இல்லை என்பதால் அவரை கொன்றுவிட்டு தாங்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.