LOADING

Type to search

இந்திய அரசியல்

ரூ.500 கோடி முறைகேடு.. ராஜஸ்தான் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட குதா கண்ணீர் பேட்டி

Share

500 கோடி ரூபாய் முறைகேடு குறித்து மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் விவாதிக்கத் தயாரா என்று அண்மையில் ராஜஸ்தான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ராஜேந்திர குதா பரபரப்புக் குற்றச்சாட்டை கண்ணீர் மல்க முன்வைத்தார்.

ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது மணிப்பூரில் நடந்த கலவரத்தின் போது பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் அத்துமீறல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோஷமிட்டனர். அப்போது மாநில ஊர்க்காவல்படை மற்றும் குடிமைப்பாதுகாப்பு, பஞ்சாயத்துராஜ் அமைச்சராக இருந்த ராஜேந்திர சிங் குதா, ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் அளவு அதிகரிப்பதை பார்க்கும்போது மணிப்பூர் விவகாரத்தைவிட நமது மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து நாம் ஆராய்ந்துபார்க்க வேண்டும் என்றார். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அமைச்சரின் பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனால் அதிருப்தியில் இருந்த அசோக் கெலாட் அரசு, ராஜேந்திர சிங் குதாவை அமைச்சரவையில் இருந்து நீக்கியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில் சட்டசபைக்கு வர முயன்ற ராஜேந்திர சிங்கை அவைக் காவலர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர குதா, நான் செய்த தவறு என்ன என்று கேட்டதுடன், ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களும், சட்டமன்றத்திற்குள் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் சிலர் தன்னை தாக்கியதாகவும், மிதித்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். சிவப்பு நிற டைரி ஒன்றை காட்டி பேசிய அவர், இது குறித்து முதலமைச்சர் விவாதிக்கத் தயாரா என்று கேள்வி எழுப்பினார். பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த முன்னாள் அமைச்சர் திடீரென கணணீர் விட்டு அழுதார்.