LOADING

Type to search

இந்திய அரசியல்

தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – தஞ்சை ஆட்சியர் அறிவிப்பு

Share

தஞ்சாவூர் மாவட்டத்தில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “சமூக நீதிக்காக பாடுபடுவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது கடந்த 1995ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சமும், ஒருபவுன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. முதல்-அமைச்சரால் விருது பெறுவோர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 2023ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே சமூகநீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட மேற் கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன்பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் தங்களது விண்ணப்பம் தங்களின் சுய விவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூகநீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 15ம் தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தை அணுகலாம்” என்று அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.