என்னுடைய தீர்ப்பில் நான் உறுதியாக உள்ளேன் – செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி நிஷா பானு
Share
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. நீதிபதி நிஷா பானு, செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் என்பதால் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் நீதிபதி பரத சக்கரவர்த்தி, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ததுடன், 10 நாட்களில் தனியார் மருத்துவமனையில் இருந்து சிறையில் சேர்க்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்ததுடன், செந்தில் பாலாஜியை எப்போது முதல் அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க ஏற்கனவே வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை ஏற்ற தலைமை நீதிபதி, இரு நீதிபதிகள் அமர்வை அமைக்க ஒப்புதல் தெரிவித்திருந்தார். அதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜி சட்ட விரோத காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக தான் பிறப்பித்த தீர்ப்பில் உறுதியாக உள்ளதாக நீதிபதி நிஷா பானு தெரிவித்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த புதிய உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை எனவும் தெரிவித்தார். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் குறித்து உச்ச நீதிமன்றமே முடிவு செய்யும் எனவும் தெரிவித்து இந்த ஆட்கொணர்வு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று அவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்த உள்ளார். அவருடைய நீதிமன்ற காவல் மீண்டும் நீடிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.













