குமரியில் கடத்தப்பட்ட கைக்குழந்தை கேரளாவில் பத்திரமாக மீட்பு – பெண்ணிடம் தீவிர விசாரணை
Share
கன்னியாகுமரியில் கடத்தப்பட்ட ஆறு மாத கைக்குழந்தையை கேரளாவில் பத்திரமாக மீட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் சேர்ந்தவர்கள் முத்துராஜா – ஜோதிகா தம்பதி. இவர்கள் தங்கள் 6 மாத ஆண் குழந்தை ஹரியுடன் கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தின் வெளியே நடைபாதையில் ஊசி மற்றும் பாசி வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்கள் பேருந்து நிலையம் அருகே உள்ள நடைபாதையில கடந்த 23ம் தேதி இரவு தூங்கி கொண்டிருந்தனர். அப்போது சேலை அணிந்து அதன் மேல் சட்டை அணிந்து வந்த பெண் ஒருவர், குழந்தை ஹரியை தூக்கி சென்றார்.
இது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதுகுறித்து முத்துராஜா வடசேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வடசேரி காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இதில் தனிப்படை அமைத்து ரயில் நிலையம், பேருந்து நிலையம் என பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாக தேடி வந்தனர். நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் ரயிலில் அப்பெண் ஏறி சென்ற சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் காவல்துறை கேரளா மாநில காவல்துறைக்கும் தகவல் அளித்திருந்தனர். இந்நிலையில், நான்காவது நாளான இன்று கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் பெண் ஒருவர் 6 மாத குழந்தையுடன் பிச்சை எடுத்து கொண்டிருப்பதாக ரயில்வே காவல்துறை கன்னியாகுமரி காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனிடையே அப்பெண்ணை ரயில்வே காவல்துறை அவர்களது கட்டுப்பாட்டில் அமர்த்தியுள்ளனர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட தனிப்படை காவல்துறை கொல்லம் சென்ற நிலையில் அப்பெண்ணையும் கைது செய்து 6 மாத ஆண்குழந்தையும் மீட்டனர். தொடர்ந்து முதற்கட்ட விசாரணையில், அப்பெண் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த சாந்தி (55) என்பதும், தனக்கு குழந்தை வளர்க்க ஆசை இருந்தது அதனால் கடத்தினேன் எனவும் கூறியுள்ளார். மேலும் அப்பெண்ணை கன்னியாகுமரி மாவட்டம் அழைத்து வந்து காவல்துறை விசாரணை மேற்கொண்டபின், இதுகுறித்த மேலதிக தகவல் தெரியவரும் என காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.













