LOADING

Type to search

இந்திய அரசியல்

சென்னை மழைநீர் வடிகால் பணிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

Share

தமிழ்நாட்டில் இன்னும் 2 மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அக்டோபர் மாதம் பருவமழை தொடங்கும் என்பதால் அதற்கு முன்னேற்பாடாக மழைநீர் தேங்காமல் இருக்க பல பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை ரூ.2,325 கோடி மதிப்பீட்டில் 738.22 கி.மீ. மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது.

வடசென்னை பகுதியின் கொசஸ்தலையாறு வடி நிலப்பகுதியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியின் கீழ் 769 கி.மீ. நீளத்திற்கு ரூ.3,220 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் இதுவரை 483.83 கி.மீ. நீளத்திற்கு பணிகள் நிறைவடைந்துள்ளன. தென் சென்னையில் கோவளம் வடிநிலத்தில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் ரூ.1,714 கோடி மதிப்பீட்டில் நடைபெறுகிறது. இதில் 160.83 கி.மீ. தூர பணிகளில் 21.82 கி.மீ. நீளத்திற்கு பணிகள் முடிவடைந்துள்ளது. மற்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இது தவிர மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி மற்றும் பழுது பார்க்கும் பணிகள் ரூ.27.55 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் அனைத்தும் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக முடிக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். கடந்த ஆண்டு பருவமழையின் போது சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் இந்த முறை தண்ணீர் தேங்காத அளவுக்கு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பணிகள் அனைத்தையும் இன்னும் 2 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.