ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி 5-ந்தேதி தொடக்கம் – நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார்
Share
மத்திய அரசு சார்பில், தாமிரபரணி கரையில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார். இந்த அருங்காட்சியகத்தில் அகழாய்வு பணியின் போது எடுக்கப்பட்ட பொருட்களை கொண்டு காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக ஆதிச்சநல்லூர் பரம்பில் அருங்காட்சியகம் அமைக்கவும், அதன் மேல் கண்ணாடி பேழை அமைத்து பார்வையாளர் பார்வையிடவும் பணி நடந்து வருகிறது. உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிக்காக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கியது. அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
தற்போது ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையின் ஓரத்தில் 5 ஏக்கரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், அப்போதைய ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர்கணேஷ் உதவியுடன் ஆதிச்சநல்லூர் மக்கள் சார்பில் இந்த இடங்களை இலவசமாக வாங்கி கொடுத்தார்.
இதனால் இங்கு பணிகள் மிக விரைவாக நடந்தது. இந்தியாவில் 5 இடத்தில் அருங்காட்சியகம் அமைக்கும் பணியில், முதல் முதலாக ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு திறப்பதற்கு தயாராக உள்ளது. ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணியை நாளை (5-ந்தேதி) காலை 10 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.













