LOADING

Type to search

இந்திய அரசியல்

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 35 பழங்காலத்து சிலைகள் கண்டுபிடிப்பு – சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிரடி

Share

காணாமல் போன சிலைகளை மீட்டெடுப்பதில் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து பல நூறு சிலைகளை மீட்டு உரிய கோவில்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். இந்த வகையில் தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பழங்கால சிலைகள் மற்றும் புராதன சின்னங்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக “சிலை கடத்தல் தடுப்பு பிரிவு – சிறப்பு அதிரடி தனிப்படை” என்ற அமைப்பை கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி தமிழக காவல்துறை உருவாக்கியது. இந்த “சிறப்பு அதிரடி தனிப்படை” தமிழ்நாட்டு கோயில்களில் காணாமல் போனதாகவும் மற்றும் திருடப்பட்டதாகவும் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சிலைகளின் புகைப்படங்கள் புராதன சின்னங்களின் ஒப்பீடுகளை பார்த்து வெளிநாடுகளில் உள்ள நமது பழங்கால சிலைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில் தற்போது வெளிநாடுகளில் 35 சிலைகள் இருப்பதை “சிறப்பு அதிரடி தனிப்படை” காவல்துறை கண்டறிந்து அவற்றை மீட்டுக் கொண்டு வருவதற்கான பரஸ்பர சட்ட ஒப்பந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளை, வெளிநாடுகளுடனான பரஸ்பரம் சட்ட உதவி தொடர்பான ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு அதிரடி தனிபடை மூலம் சிங்கப்பூரில் 16 பழங்கால சிலைகள், அமெரிக்காவில் 8 பழங்கால சிலைகள், ஆஸ்திரேலியாவில் 7 பழங்கால சிலைகள், ஜெர்மனியில் 2 பழங்கால சிலைகள் இருப்பது கண்டுபிடித்துள்ளனர்.

குறிப்பாக சிங்கப்பூரில் நடன சம்மந்தர், நிற்கும் விநாயகர் சிலை, அனுமான், கருடன், மயிலம்மன், விஷ்னு, முருகர், அய்யனார், நிற்கும் அம்மன் சிலை, ராமானுஜர், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் பல நூறாண்டுகளுக்கு முந்தைய ஆண் பெண் கடவுள்களுக்கான இரண்டு தங்க கவசங்கள் உள்ளிட்ட 16 சிலைகளும் அமெரிக்காவில் உள்ள சிவன் சிலை, சுந்தரர் சிலை, பறவை நாச்சியார் சிலை உள்ளிட்ட எட்டு சிலைகளும் ஆஸ்திரேலியாவில் உள்ள வெள்ளி செப்பேடுகள் உள்ளிட்ட ஏழு பழங்கால சிலைகளும், ஜெர்மனியில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான பைபிள் உள்ளிட்ட இரண்டு சிலைகள் என 35 க்கும் மேற்பட்ட பழங்கால சிலைகள் மற்றும் பழங்கால புராதன சின்னங்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக எம்லாட் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

வெளிநாடுகளுடனான பரஸ்பர சட்ட ஒப்பந்தம் மூலம் இன்னும் சில மாதங்களில் அந்த சிலைகள் மற்றும் புராதன சின்னங்கள் மீட்டுக் கொண்டு வரப்படும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த ஒப்பந்த முறையில் வெளிநாடுகளில் உள்ள பழங்கால சிலைகள் மற்றும் புராதன சின்னங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் அதிக புராதன சிலைகளை மீட்டு எடுக்கும் நடவடிக்கை முயற்சி இதுவேயாகும் என்பது குறிப்பிடத்தக்கது.