LOADING

Type to search

இந்திய அரசியல்

‘இந்து மதம் வேறு, சனாதனம் வேறு’ கே.எஸ்.அழகிரி பேட்டி

Share

“இந்து மதம் வேறு, சனாதனம் வேறு. சனாதானத்திற்கு எதிராகப் பேசினால் இந்துக்களுக்கு ஆபத்து என பா.ஜ.க., ஏன் பதறுகிறது.?” என்று நெல்லையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டியளித்தார்.

நெல்லை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:

அமைச்சர் உதயநிதி சனாதனத்திற்கு எதிராகத்தான் பேசினார். இந்துக்களுக்கு எதிராகப் பேசவில்லை. இதை பா.ஜ.க.வினர் இந்துக்களுக்கு எதிராக பேசிவிட்டதாக திரித்து கூறிவருகின்றனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமானுஜர் திருக்கோவிலூரில் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துச் சென்று பூணூல் அணிவித்து புரட்சி செய்தார். அவர் என்ன இந்துக்களுக்கு எதிரானவரா?

வள்ளலார் மதமெனும் பேய் என்னை பிடியாது இருக்க வேண்டும் என்றார். அவர் என்ன இந்துக்களுக்கு எதிரானவரா?

காந்தி தீண்டாமையை எதிர்த்தார். அவரும் சனாதனத்திற்கு எதிரானவர்தான்.
சனதானம் என்பது நிலையானது என்கிறது. எந்த மூடப்பழக்கத்தையும் மாற்றத்திற்கு உட்படுத்தக்கூடாது என்கிறது. மதத்தில் பகுத்தறிவு கொண்டுவருவது தவறல்ல.
அமைச்சர் உதயநிதிக்கு சனாதனத்திற்கு எதிராகப் பேச உரிமையுண்டு. அவருடைய தந்தை, பாட்டனார், பெரியார் கூறியதைத்தான் திரும்பக் கூறியுள்ளார்.

அவர்கள் இந்து மதத்தில் உள்ள மூடப்பழக்கவழக்கங்களைத்தான் எதிர்த்தார்கள். மக்களை எதிர்க்கவில்லை.பா.ஜ.க.வினர் திடீரென இன்று எதிர்க்க வேண்டிய காரணம் என்ன? தேர்தல் வருகிறது என்பதாலா?

நீங்கள் பெண்களை உடன்கட்டை ஏற அனுமதித்தவர்கள்தானே. பிணத்தின் மீது படுத்து பெண்ணை உயிரை விட சொன்னவர்கள் தானே. அந்த சனாதனத்தைதான் எதிர்க்கிறோம்.

மத்திய அமைச்சர் அமித்ஷா இந்துக்களுக்கு எதிராக உதயநிதி பேசிவிட்டதாக அலற வேண்டிய அவசியமில்லை.

நாங்களும் இந்துக்கள்தான். இந்து மதம் சீர்குலைவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். சனாதன கூட்டத்தை வேர் அறுப்போம்.

சுவாமி விவேகானந்தரே மூடப்பழக்கவழக்கங்களை ஒழிக்க வேண்டும் என்றார். வானதி சீனிவாசனுக்கு சனாதனம் பற்றிய புரிதல் இல்லை. இந்து மதம் வேறு, சனாதனம் வேறு. ஒரே நாடு ஒரே தேர்தல் சர்வாதிகார ஆட்சிக்குத்தான் வழிவகுக்கும். இந்தியா ஒரே நாடு அல்ல. அது பல பிரதேசங்களின் கூட்டமைப்பு.
இவ்வாறு அழகிரி கூறினார்.