ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை பிரேசிலிடம் ஒப்படைத்தது இந்தியா
Share
டில்லியில் இரண்டு நாட்களாக நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாடு நிறைவடைந்தது. அடுத்தாண்டு ஜி-20 மாநாட்டை நடத்துவதற்கான தலைமை பொறுப்பை பிரேசில் அதிபரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜி-20 உச்சி மாநாட்டு டில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்தியா தலைமையேற்று நடத்திய இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். முதல் நாளான நேற்று 37 பக்கம் கொண்ட டில்லி பிரகடனம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், ஜி20 உச்சிமாநாட்டின் 2ஆம் நாள் கூட்டம் நடைபெற்றது. ஒரே எதிர்காலம் என்ற தலைப்பிலான இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்வாக பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் லுலா டா சில்வா, இந்தோனேசிய அதிபர் ஜொகொ விடோடோ ஆகியோர் மரக்கன்று வழங்கினர். தொடர்ந்து, இந்தியாவிடமிருந்த ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை பிரதமர் மோடி பிரேசில் அதிபர் லுலா டா சில்வாவிடம் ஒப்படைத்தார்.
அதன்பின் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்த இரண்டு நாட்களில் பெறப்பட்ட ஆலோசனைகளை ஆய்வு செய்து அதன் முன்னேற்றத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வரும் நவம்பர் மாத இறுதியில் இந்தியா காணொலி காட்சி மூலம் ஜி-20 கூட்டத்தை நடத்த உள்ளதாகக் கூறினார். இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட தலைப்புகள் குறித்து காணொலி காட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் இத்துடன் ஜி-20 உச்சிமாநாடு நிறைவடைவதாகவும் பிரதமர் மோடி அறிவித்தார்.













