LOADING

Type to search

இந்திய அரசியல்

கேரளாவில் காரை ஏற்றி மாணவனை கொலை செய்த உறவினர்

Share

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பூவாச்சல் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி தீபா. இவர்களது மகன் ஆதிசேகர் (வயது 15). இவன் கட்டக்கடை பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 30-ந்தேதி ஆதிசேகர், அந்தப்பகுதியில் சைக்கிளில் சென்றான். அப்போது அந்த வழியாக வந்த கார், சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ஆதிசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். விபத்து குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஆதிசேகரின் பெற்றோர், காவல்துறையில் ஒரு புகார் கொடுத்தனர். அதில் தங்கள் மகன் விபத்தில் சாகவில்லை. அவனது சாவில் சந்தேகம் உள்ளது என குறிப்பிட்டு இருந்தனர்.

அதன்பேரில் காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கினர். இதில் ஆதிசேகர் மீது திட்டமிட்டு காரை ஏற்றி கொலை செய்திருப்பது தெரியவந்தது. சிறுவனின் உறவினரான பூவாசலை சேர்ந்த பிரியரஞ்சன் என்பவர் தான் இந்த கொலை செயலில் ஈடுபட்டுள்ளார் என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறை அவரை தேடினர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தியதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியரஞ்சன், கோவில் அருகே அமர்ந்து மது அருந்தியதாகவும் கோவில் சுவற்றில் சிறுநீர் கழித்ததாகவும் அதனை பார்த்த சிறுவன் ஆதிசேகர் மற்றவர்களிடம் கூறியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த சம்பவம் நடைபெற்று இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து பிரியரஞ்சனை காவல்துறை தேடி வருகின்றனர்.