LOADING

Type to search

இந்திய அரசியல்

குலசேகரம் அருகே, 2 பேரை கடித்துக் குதறிய புலி திடீரென சுருண்டு விழுந்து இறந்தது

Share

கன்னியாகுமரி மாவட்டம் அடர்ந்த மலைப் பகுதிகளை உள்ளடக்கியது. இந்த மலைப்பகுதியில் யானை, மான், பன்றி உள்பட தாவர

உண்ணிகள் முதல் சிறுத்தை, புலி உள்பட அசைவம் சாப்பிடும் விலங்குகள் வரை ஏராளமான உயிரினங்கள் வசித்து வருவதால், கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதி பல்லுயிர் இன வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் முண்டந்துறை புலிகள் சரணாலய எல்லைக்குள் கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதிகள் வருவதால் மலையோர பகுதிகளில் அவ்வப்போது புலி நடமாட்டம் இருக்கும். கோதையாறு சுற்றுவட்டார பகுதியில் ரப்பர் பால் வெட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபகாலமாக அந்த பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதை தொழிலாளர்கள் கண்டுள்ளனர். மேலும், தொழிலாளி ஒருவரை

புலி தாக்கியதில் காயமடைந்ததாகவும் தகவல் பரவியது. இந்த நிலையில் குலசேகரம் அருகே புலி ஒன்று 2 பேரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பேச்சிப்பாறை பகுதியை அடுத்த மலை கிராமமான ஆண்டி பொத்தை பகுதியை சேர்ந்தவர் ஜெகன்(28). அன்னாசி விவசாயம் செய்து வருகிறார்.

குலசேகரம் அருகே சேக்கல் பகுதியில் உள்ள தனது அன்னாசி தோட்டத்திற்கு செல்வதற்காக நேற்று காலை சுமார் 6 மணி அளவில் பைக்கில் புறப்பட்டார். குலசேகரம் அருகே காக்கச்சல் தேனங்கோடு பகுதியில் வந்த போது மலையில் இருந்து திடீரென பாய்ந்து வந்த புலி கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையோரம் பைக்கில் சென்று கொண்டிருந்த ஜெகன் மீது மோதியது.

மோதிய வேகத்தில் புலியும் பைக்கில் இருந்து ஜெகனும் கீழே விழுந்தனர். புலி மீது ஜெகன் விழுந்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகன் உருண்டபடியே புலியிடம் இருந்து நழுவினார். அந்த புலி என்ன நினைத்ததோ தெரியவில்லை. அப்படியே ஜெகனை ஒன்றும் செய்யாமல் அங்கிருந்து தெறித்து ஓடிவிட்டது.

புலி கடிக்கவில்லை என்றாலும் பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த ஜெகன் கூச்சலிட்டார். அந்த வழியாக சென்றவர்கள்

ஜெகனை மீட்டனர். இதற்கிடையே ஜெகனை விட்டு விட்டு பாய்ந்து ஓடிய புலி அருகே உள்ள சாஸ்தா கோவில் பின்பக்கம் தனியார் ரப்பர் தோட்டத்திற்குள் புகுந்தது. அந்த தோட்டத்தில் இந்த ஆண்டின் முதல் ரப்பர் பால்வெட்டும் பணிக்காக வந்திருந்த குலசேகரம் அருகே

திருநந்திக்கரை பகுதியில் உள்ள திட்டவிளை பகுதியை சேர்ந்த பூதலிங்கம் (61) என்பவர் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.

இங்கு பூதலிங்கம் மட்டும் தனியாக இருந்த நிலையில் புலி திடீரென பூதலிங்கத்தின் மீது பாய்ந்தது. இதனை சற்றும் எதிர்பாராத போது லிங்கம் புலியின் பிடியிலிருந்து விடுவிக்க போராடினார். ஆனால், அந்த புலி மிகுந்த பலத்துடன் இருந்ததால் தப்பிக்க முடியவில்லை. பூதலிங்கம் புலியுடன் கட்டிப்புரண்டு சண்டையிட்டார். பூதலிங்கத்தின் உடலில் முகம், வயிறு, கை, கால் என கண்ட இடங்களில் எல்லாம் புலி நகத்தால் கீறியது. உடலின் சில பகுதிகளில் கடித்துக் குதறியது. இந்த போராட்டத்தில் படுகாயம் அடைந்த பூதலிங்கம் அலறினார்.

இவரது மரண ஓலம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். திரளான மக்கள் வருவதை கண்ட புலி,

பூதலிங்கத்திடம் இருந்து விலகி பாய்ந்து ஓடியது. அப்போது சிறிது தூரத்திலேயே அருகே இருந்த பள்ளத்தில் விழுந்த புலி திடீரென சுருண்டு விழுந்து மயங்கியது.

இதைக் கண்டு அதிர்ச்சி அ டைந்த பொதுமக்கள் பூதலிங்கத்தை மீட்டு வாகனம் மூலம் குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதேபோல் சாலையோரம் புலி தாக்கியதில் படுகாயம் அடைந்த ஜெகனையும் அதே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே அந்த புலி அசைவற்று கிடந்தாலும் அதன் அருகே யாரும் செல்லவில்லை. பொதுமக்கள் உடனே குலசேகரம் காவல் நிலையம் மற்றும் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

உடனே அங்கு வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தினர் . புலியை பரிசோதனை செய்தபோது அந்த புலி ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. புலி எப்படி?

இறந்தது என்பது மர்மமாக உள்ளது.வனத்துறை உயர் அதிகாரிகளுக்கும், முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது அவர்கள் விரைந்து வந்து புலியை உடற்கூறாய்வு செய்ய உள்ளனர் அதன்பிறகு புலி எப்படி

இறந்தது என்ற விவரம் தெரிய வரும் புலியின் உடலில் கழுத்து உள்பட பல இடங்களில் காயம் இருந்தது. மேலும், புலியின் கழுத்துப் பகுதியில் முள்ளம் பன்றியின் முட்கள் குத்திய நிலையில் இருந்தது. எனவே இந்த புலி ஜெகன், பூதலிங்கத்தை தாக்குவதற்கு முன்பாக வனப்பகுதியில் முள்ளம் பன்றியை வேட்டையாட முயன்றிருக்கலாம் அல்லது வேட்டையாடி உண்டு இருக்கலாம் இந்த போராட்டத்தில் முள்ளம்பன்றியின் முட்கள் புலியை குத்தி கிழித்து காயம் ஏற்படுத்தி இருக்கலாம். இதனால் தான் புலி இறந்திருக்கும் என வனத்துறையினர் கருதுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2பேரை புலி தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளதும், மலையோர பகுதியில் மேலும் புலி நடமாட்டம் இருக்க வாய்ப்பு உள்ளதாலும் பொதுமக்கள்

அச்சம் அடைந்துள்ளனர்.