ஞானவேல் ராஜா மீது பகீர் புகார்… தற்கொலைக்கு முயன்ற பணிப்பெண்
Share
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் வீடு சென்னை தியாகராய நகரில் உள்ள ஜெகதீஸ்வரன் தெருவில் உள்ளது. அவர்களது வீட்டில் லட்சுமி என்ற பணிப்பெண் வீட்டு வேலைகளை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஞானவேல் ராஜாவின் வீட்டில் இருந்து சில நகைகள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பணிப்பெண் லட்சுமி மீது ஞானவேல் ராஜாவின் மனைவி நேஹா சந்தேகம் அடைந்துள்ளார். லட்சுமியிடம் நகைகள் காணாமல் போனது குறித்து விசாரித்து இருக்கிறார். முதல் நாள் நேஹா, லட்சுமியிடம் நகைகள் குறித்து விசாரித்த நிலையில், மறுநாளில் இருந்து லட்சுமி பணிக்கு வராமல் இருந்துள்ளார். மேலும் அவரை தொடர்பு கொண்டால் லட்சுமியின் செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதனால் மேலும் சந்தேகம் அடைந்த நேஹா தனது கணவர் ஞானவேல் ராஜாவிடம் இதுகுறித்து தெரிவித்திருக்கிறார். உடனடியாக தனது உதவியாளர் மூலம் நகைகள் காணாமல் போனது குறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அந்த புகாரில் தங்கள் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் லட்சுமி மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து லட்சுமியை அழைத்து காவல்துறையினர் காணாமல் போன நகைகள் குறித்து விசாரித்து இருக்கிறார்கள். இதற்கு அடுத்த நாள் லட்சுமி தற்கொலைக்கு முயன்று உள்ளார் என கூறப்படுகிறது.
இதை பார்த்த உறவினர்கள் உடனடியாக அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில்தான் லட்சுமியின் மகள் மாம்பலம் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் அவரது மனைவி நேஹா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மீதும் தனது தாயை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் மனுவை கொடுத்துள்ளார். அதில் ஞானவேல் ராஜாவின் மனைவி நேஹா நகைகளை வேறு எங்கோ தொலைத்து விட்டு தனது தாயார் லட்சுமி மீது பழிப் போடுகிறார் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது திரைப்பட வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.