அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதங்கள் நிறைவு – மே 3ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு!
Share
கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு மீதான விசாரணையில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வருகிற மே 3ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டில்லி புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் தனது கைது நடவடிக்கை சட்டவிரோதம் என அறிவிக்க கோரியும் கைதை எதிர்த்தும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தெரிவித்ததாவது.. ”இது தொடர்பான வழக்கில் சரத் ரெட்டி, ராகவ் மொகந்தா உட்பட பலருக்கு நீதிமன்றங்கள் இடைக்கால ஜாமீன் கொடுத்துள்ளது. ஆனால் அப்போது எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காக அமலாக்கத்துறை, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மட்டும் இத்தனை எதிர்ப்புகளை சிறப்பு நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரையில் தெரிவிப்பது ஏன்? நடந்து முடிந்த கோவா சட்டப்பேரவை தேர்தல் என்பது பொதுவான ஒன்றாகும். அங்கு கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றார். ஆனால் அதனையும் டில்லி மதுபானக் கொள்கை விவகாரத்தையும் அமலாக்கத்துறை தரப்பில் தொடர்புப்படுத்தி உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவிலுக்கு எதிரான எந்த ஆதாரமும் இல்லை, குற்றம் செய்ததற்கான தெளிவுகளும் இல்லை அவ்வாறான நிலையில் எவ்வாறு இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவே இந்த கைது நடவடிக்கையை சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதம் நிறைவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை வரும் வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அமலாக்கத்துறை தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.