LOADING

Type to search

உலக அரசியல்

இஸ்ரேலுக்கு எதிர்ப்பு: கொலம்பியா பல்கலை. ஹாமில்டன் அரங்கை கைப்பற்றிய மாணவர்கள்!

Share

இஸ்ரேலை எதிர்த்து போராடி வரும் அமெரிக்க பல்கலைகழக மாணவர்கள், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஹாமில்டன் அரங்கை அதிகாலை கைப்பற்றினர்.  

     இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 150 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள்  இடம் பெயர்ந்துள்ளனர். இப்போரில் இதுவரை 34,356 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 77,368க்கும் மேற்பட்டோட் காயமடைந்துள்ளனர்.

இதுவரை 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளனர். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தியது. சமீபத்தில் காஸா பகுதியின் 2வது மிகப்பெரிய நகரமான கான் யூனிஸை விட்டு இஸ்ரேல் ராணுவம் வெளியேறியதாக தகவல் வெளியானது. ஆனாலும் போரால் புலம் பெயர்ந்த பாலஸ்தீனர்களின் கடைசி புகலிடமாகத் திகழும் ராஃபாவுக்குள் தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கு வசதியாகத்தான் கான் யூனிஸ் நகரிலிருந்து படையினர் வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் சிகாகோ, பிரான்சிஸ்கோ, நியூயார்க், கலிபோர்னியா உள்ளிட்ட நகரங்களில் உள்ள கொலம்பியா, ஹார்வர்ட், யேல், ஐவி லீக் ஸ்கூல், தெற்கு கலிபோர்னியா, டெக்சாஸ் பல்கலைக்கழகங்களில் கடந்த இரண்டு வாரங்களாக காஸா மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பல மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இருப்பினும் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இஸ்ரேல் நிறுவனங்களுடன் பல்கலைக்கழகம் போட்டுள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்தல், நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் பொது மன்னிப்பு ஆகிய 3 கோரிக்கைகளையும் நிர்வாகத்திடம் வைத்துள்ளனர். இந்த நிலையில், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஹாமில்டன் அரங்கை  அதிகாலை மாணவர்கள் கைப்பற்றினர். அவர்கள் மேஜைகள், நாற்காலிகள், இரும்பு பொருள்களை நுழைவு வாயிலில் வைத்து காவல்துறையினர் உள்ளே வராதபடி தடுப்புகள் அமைத்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அதனுடன், ஜன்னல்களில் பாலஸ்தீன நாட்டின் கொடிகளையும் பறக்கவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அனைத்து மாணவர்களும் ஹாமில்டன் அரங்குக்கு வருகை தந்து போராட்டத்தில் இணையுமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் இன்ஸ்டாகிராமில் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும்,  அவர்களின் மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை ஹாமில்டன் அரங்கைவிட்டு வெளியேற மாட்டோம் என்றும் போராட்டம் தொடரும் என்றும் சமூக ஊடகம் வாயிலாக அறிவித்துள்ளனர்.