பாஜகவில் 75 வயதில் ஓய்வு பெறும் விதி அத்வானிக்கு மட்டும்தானா, மோடிக்கு இல்லையா? – கெஜ்ரிவால்
Share
டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி கைதான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ந்தேதி வரை நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமினை உச்சநீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து ஜெயிலில் இருந்து விடுதலையான கெஜ்ரிவால் ஆம் ஆத்மி அலுவலகத்தில் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, ‘பாஜக கட்சி விதிப்படி 75 வயதைப் பூர்த்தி செய்த ஒருவர், அக்கட்சியிலிருந்து ஓய்வு பெற வேண்டும். அப்படி இருக்க மோடி 75 வயதை அடைய இன்னும் 2 ஆண்டுகளே உள்ள நிலையில், யாரை முன்னிறுத்தி ஓட்டு கேட்கிறது பாஜக? அமித்ஷாவைப் பிரதமர் ஆக்க ஓட்டு கேட்கிறார்களா? இந்தியா கூட்டணிக்கு யார் பிரதமர் என பாஜகவைச் சேர்ந்தவர்கள் கேட்கிறார்கள். நான் அவர்களிடம் கேட்கிறேன், உங்கள் பிரதமர் வேட்பாளர் யார்?” பிரதமர் மோடி விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுபெற உள்ளார். மோடி ஓய்வு பெற்றார் அவரது உத்தரவாதத்தை பூர்த்தி செய்யப்போவது யார்?” என கேள்வி எழுப்பினார். இதனையடுத்து கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, “75 வயதை பூர்த்தி அடைந்தவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எந்த விதிமுறையும் பாஜகவில் இல்லை. ஆகவே பாஜக வென்றால் மோடியே 5 ஆண்டுகள் பிரதமர் பதவியில் நீடிப்பார்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ’75 வயது நிறைந்தவர்களுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்கப்படாது’ என ஐந்து வருடங்களுக்கு முன் அமித் ஷா பேசியக் காணொளியை ஆம் ஆத்மி கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய கெஜ்ரிவால், “75 வயது நிறைந்தவர்களுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்கப்படாது என்று பிரதமர் மோடி வகுத்த விதியை அவரே பின்பற்றமாட்டார் என்று நான் நினைக்கவில்லை. பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை ஓய்வு பெறச் செய்த விதியை பின்பற்ற மாட்டேன் என்று மோடி கூறமாட்டார். அத்வானிக்காக தான் இந்த விதி உருவாக்கப்பட்டது. இந்த விதி எனக்குப் பொருந்தாது என்று பிரதமர் சொல்லட்டும். பிரதமர் மோடி இதைச் சொல்வார் என்று நான் நினைக்கவில்லை” என்று பேசியுள்ளார்.