வாக்கு எண்ணிக்கை – தடையில்லா மின்சாரம் வழங்க அறிவுறுத்தல்!
Share
மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(ஜூன் 4) நடைபெறும் நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு ஜூன் 1ம் முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளதாவது: “வாக்கு எண்ணும் மையங்களில் இன்று முதல் நாளை வரை தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதி செய்ய வேண்டும். துணை மின்நிலையத்தில் உள்ள ஷிப்ட் ஆபரேட்டர்கள், சப்ளையை கண்காணித்தல், பராமரித்தல் மற்றும் அவசரகால செயல்பாடுகள் ஏதேனும் இருந்தால், விரைவாக மறுசீரமைப்பதற்கான அவசர நடவடிக்கைகளைக் கையாள்வதற்கு பணி நேரங்களில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்” இவ்வாறு அனைத்து செயற்பொறியாளர்களுக்கும் மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.