LOADING

Type to search

இந்திய அரசியல்

“உ.பி. கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு சமூக விரோதிகளே காரணம்” என்கிறார், போலே பாபா சாமியார்

Share

121 உயிர்கள் பலியான உ.பி. மாநில ஹாத்ரஸ் சம்பவத்துக்கு சமூகவிரோதிகளே காரணம் என போலே பாபா தெரிவித்துள்ளார். சம்பவத்திற்கு பின் தலைமறைவானவர் முதல்முறையாக அதன் மீது கருத்து தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் ஹத்ரஸ் மாவட்டத்தின் சிக்கந்தராராவின் முகல்கடி கிராமத்தில் பாபாவின் கூட்டம் ஜுலை 2-ல் நடைபெற்றது. இதில், முதல் நபராகக் கிளம்பிய பாபாவின் பாதங்களை வணங்க அவரது பக்தர்கள் முயன்றனர். இதை செய்ய முடியாத பலர், மண்ணில் பதிந்த பாபா பயணித்த வாகனத்தின் டயர் சுவடுகளை வணங்க முயன்றனர்.

இதனைத் தடுத்து பாபாவின் தனிப் பாதுகாவலர்கள் பக்தர்களைத் தள்ளிவிட்டதால் நெரிசல் உருவாகி உள்ளது. தொடர்ந்து பெரிய அளவில் ஏற்பட்ட விபத்தில் மூச்சுத்திணறியும், நசுங்கியும் 121 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த பலரில் இன்னும் 38 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர் . இவர்களை நேரில் வந்து பார்க்காமலும், ஆறுதல் அளிக்காமலும் தலைமறைவாகி விட்டார் போலே பாபா.

இந்தநிலையில் சாகர் விஷ்வ ஹரி போலே பாபா எனப்படும் சூரஜ் பால் ஜாட்டவ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பலியானோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமுற்றவர்கள் விரைந்து நலம் பெற கடவுளை வேண்டுகிறேன். நிகழ்ச்சி முடிந்தவுடன் நான் அங்கிருந்து உடனடியாக வெளியேறி விட்டேன். இதனால், அங்கு என்ன நடந்தது என எனக்குத் தெரியாது. சில சமூகவிரோதிகள் தான் இந்த நெரிசல் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சனையை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ள போலே பாபா, இதில் வாதிட உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான ஏ.பி.சிங்கை நியமித்துள்ளார். மூத்த வழக்கறிஞரான ஏ.பி.சிங் டெல்லியின் நிர்பயா பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதிட்டவர். நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்.