LOADING

Type to search

இந்திய அரசியல்

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு சிபிஐ பதிலளிக்க உத்தரவு – உயர்நீதிமன்றம்

Share

டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீது பதிலளிக்க சிபிஐக்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் முடிவடைந்து கடந்த மாதம் 2ம் தேதி மீண்டும் திகார் சிறையில் கெஜ்ரிவால் ஆஜரானார். இதையடுத்து, சிறையில் இருந்த கெஜ்ரிவாலை கடந்த மாதம் 26ம் தேதி சிபிஐ கைது செய்தது. சிபிஐ கைதை எதிர்த்து ஜாமீன் கோரியும், வழக்கை அவசர வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்களுக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது இந்த குற்றச்சாட்டு தொடர்பாக 2 ஆண்டுகளுக்கு பின்னர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்கில், விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய பின்னர், சிபிஐ கைது நடவடிக்கையை மேற்கொண்டது. அவர் ஒரு  தீவிரவாதியோ அல்லது தொடர்ச்சியான குற்றங்களை செய்பவரோ கிடையாது. இந்த விவகாரத்தில் சட்டப்படி ஒரு இடைக்கால நிவாரணத்தை தான் கோருகிறேன்” என வாதிட்டார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய மனுவிற்கு ஒரு வாரத்தில் சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.