காசா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல் – 30 பேர் பலி
Share
இஸ்ரேல் படையினர் காசாவின் மத்திய பகுதியில் வான்வழியே அதிரடியாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில், டெய்ர் அல்-பலா பகுதியில் உள்ள மகளிர் பள்ளி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில், அந்த பள்ளியில் தஞ்சம் அடைந்திருந்த 30 பேர் உயிரிழந்தனர். இதில், காயமடைந்த நபர்கள் நகரில் அல் அக்சா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதுபற்றி இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, இந்த பள்ளியில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தளபதி மற்றும் அந்த அமைப்பின் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வந்துள்ளது. அதில், ஆயுதங்களை பதுக்கி வைத்து, தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு உள்ளனர் என்று தெரிவித்து உள்ளது. இதுதவிர வேறு பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 11 பேர் பலியாகி உள்ளனர் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அமெரிக்கா, எகிப்து, கத்தார் மற்றும் இஸ்ரேல் நாடுகள், இத்தாலியில் ஒன்றாக சந்தித்து, பணய கைதிகள் விவகாரம் மற்றும் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றை பற்றி இன்னும் சில நாட்களில் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளன. இந்த சூழலில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.