LOADING

Type to search

இந்திய அரசியல்

“மீனவர்கள் கைது செய்யப்படுவதை இந்திய கடற்படை பார்த்து கொண்டிருக்கிறதா?” – கனிமொழி எம்.பி. கேள்வி!

Share

நாட்டின் பொருளாதாரத்தில் 7 முதல் 8% வரை பங்களிக்கும் மீனவர்கள் கைது செய்யப்படுவதை இந்திய கடற்படை மற்றும் பாதுகாப்புப்படை கண்மூடி பார்த்து கொண்டிருக்கிறதா? என மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினார்.

    மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்கதை ஆகி வருகிறது. மேலும் மீனவர்களின் படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கவும், இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தை தடுக்கவும் மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக மீனவர்களின் விவகாரம் குறித்து மக்களவையில் பேசினார். அவர் பேசியதாவது, “மீனவர்களின் நிலை குறித்தும், பிரச்னை குறித்தும் விளக்கி தமிழ்நாடு முதலமைச்சர் மீண்டும் மீண்டும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இந்திய கடற்படை மற்றும் பாதுகாப்புப்படை என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? கண்மூடி இதை பார்த்து கொண்டிருக்கிறார்களா? தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட 22 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 2 படகுகளையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளனர். இந்த விவகாரத்தில் உடனடியான தீர்வு எடுக்கப்பட வேண்டும். தொடர்ந்து தமிழக மீனவர்கள் இப்படி துயரங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க முடியாது” என தெரிவித்தார்.