LOADING

Type to search

இந்திய அரசியல்

பட்டாசு ஆலையில் விபத்து – 2 பேர் பலி

Share

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் 2பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகை என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுதான். பட்டாசு இல்லாமல் தீபாவளி பண்டிகை முழுமை பெறாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். தீபாவளி மட்டுமல்லாது பிரத்யேக சில பண்டிகைகளிலும் பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியளவில் பட்டாசுக்குப் பெயர்போன ஊர் என்றால் அது சிவகாசிதான்.

சிவகாசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் உள்ளூர், வெளியூரைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பணியாற்றி வருகிறார்கள். தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் சமயங்களில் அதிகளவிலான பட்டாசு உற்பத்தி நடைபெறும்.

இதனால் பலநேரங்களில் பட்டாசு ஆலை விபத்துகளும் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. உயிருக்கு பாதுகாப்பில்லாத தொழிலாக பட்டாசு ஆலை இருந்து வந்தாலும் பலரும் வாழ்வாதாரம் தேடி இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மாயத்தேவன்பட்டியில் இன்று பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உடல்கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, மாயத்தேவன்பட்டியில் நிகழ்ந்த வெடி விபத்தில் இருவர் இறந்த நிலையில் ஜெயந்தி பட்டாசு ஆலை போர்மேன் பாலமுருகன் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளனர்.