LOADING

Type to search

இந்திய அரசியல்

“நான் வாழ்ந்தது பயனுள்ள வாழ்க்கை என நிம்மதி அடைகிறேன்” – விருது பெற்ற குமரி ஆனந்தன் பேட்டி!

Share

தான் வாழ்ந்தது பயனுள்ள வாழ்க்கை என நிம்மதி அடைவதாக சுதந்திர தினவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தமிழர் தகைசால் விருது பெற்ற குமரி ஆனந்தன் பேட்டியளித்தார்.

     78வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி காலை டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். இதனையடுத்து மக்களிடையே உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து, சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். அந்த வகையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானியும், சந்திரயான்-3 திட்ட இயக்குநருமான வீரமுத்துவேலுக்கு அப்துல்கலாம் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த ஆண்டுக்கான தகைசால் விருது மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தகைசால் விருது பெற்ற மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது,

“சொல்லிசையால் கோட்டையில் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மகன் கையால் பெருமை பெற்றுள்ளேன். இது என் வாழ்நாளில் கிடைத்த சிகரமான பரிசு. முதலமைச்சருக்கும், அவரை சார்ந்தவர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. முதலில் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு அவர்கள் பின் செல்ல வேண்டும். எந்த கட்சிக்கும் எங்கேயும் வர உரிமை உண்டு. ஆனால் அந்த உரிமையை கொடுப்பது மக்கள். மக்கள் நினைத்தால் யாரும் வரலாம். மக்கள்தான் நாட்டின் உச்சபட்ச அதிகாரம் பெற்றவர்கள். காங்கிரஸ் கட்சியினர் சுறுசுறுப்பாக பணி செய்தால், காங்கிரஸ் மகத்தான வளர்ச்சி பெறும். இவ்வளவு நாளும் உழைத்த உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. நற்சான்றிதழ் கிடைத்துள்ளது. நான் வாழ்ந்தது பயனுள்ள வாழ்க்கை தான் என்று நிம்மதி அடைகிறேன். காமராஜர் போன்ற நல்ல தலைவர்களை பார்த்து அவர்களை விடாமல் பின்பற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.