LOADING

Type to search

உலக அரசியல்

அமைச்சர் மாற்றத்தால் சிக்கல் – உணவகத் தொழிலில் தேக்க நிலை: தலைவர் டத்தோ சுரேஷ் ஆதங்கம்

Share

நக்கீரன்

கோலாலம்பூர், ஆக.28:

உணவகத் தொழிற்துறையைச் சேர்ந்தவர்கள், மாற்றுத் தொழிலாளிகளை அமர்த்திக்கொள்ள முடியாமல் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர் என்று மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்க(பிரிமாஸ்) தலைவர் டத்தோ ஜே.கோவிந்தசாமி (எ) சுரேஷ், மத்திய அரசாங்கத்தின்பால் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

பிரிமாஸ் அமைப்பின் 24-ஆம் ஆண்டு(2024)க் கூட்டம், கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் செண்ட்ரல் 2, சிறு-நடுத்தர தொழில்முனைவோர்க் கழகம்(SME Corp.) பிளாட்டினம் சென்ரல், மக்கோத்தா அரங்கத்தில் ஆகஸ்ட் 28, புதன்கிழமை பிற்பகல் 2:30 மணி அளவில் தொடங்கியது.

கூட்டம் தொடங்குமுன் செய்தியாளர்களிடம் பேசியபோதும், கட்டத்தில் தலைமை உரை நிகழ்த்தியபோதும் தலைவர் டத்தோ சுரேஷின் கருத்து மாற்றுத் தொழிலாளர்களை அமர்த்திக் கொள்வதைப் பற்றியதாகத்தான் இருந்தது.

கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தே தமிழர் உணவக உரிமையாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டாலும், புத்தாயிரத்தாம் ஆண்டு தொடங்கியபோதுதான் அமைப்பு ரீதியாக சங்கப் பதிவகத்தில் பதிவுபெற்று ஒரு தேசிய அமைப்பாக செயல்படத் தொடங்கினர்.

இதற்கான அடியும் முதலுமாக இருந்தவர்-இன்றளவும் இருப்பவர், தாமரைக் குழுமத்தின் இயக்குநர் டத்தோ ரெனா. இராமலிங்கம் பிள்ளை ஆவார்.

தற்பொழுது, நாடு முழுவதும் ஏறக்குறைய 1,500 உணவக உரிமையாளர் களை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் பிரிமாஸ், இந்த உறுப்பினர்கள் நடத்தும் சுமார் 4,000 உணவகங்கள் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதுகுறித்து, டத்தோ சுரேஷ், தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

உணவகங்களில் பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஒப்பந்தம் முடிந்த பின்போ அல்லது ஒப்பந்த காலத்திற்கு முன்போ தங்களின் தாய்நாட்டிற்குத் திரும்பும் வேளையில் மாற்றுத் தொழிலாளர்களை அமர்த்திக் கொள்வதற்கான அனுமதியை கடந்த(2023) ஆண்டுக் கூட்டத்தின்போது அப்போதைய மனிதவள அமைச்சரிடம் முன்வைத்தோம்.

புதிய தொழிலாளர்களை வரவழைக்க அரசு தடைவிதித்துள்ள நிலையில், திரும்பிச் செல்லும் அல்லது பாதியில் திரும்பும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான மாற்றுத் தொழிலாளர்களை புதிதாக அமர்த்திக் கொள்வதற்கான கோரிக்கை மிகவும் நியாயமாக இருப்பதால் இதுகுறித்து அமைச்சரவைக் கூட்டத்திலும் பிரதமரிடம் தனிப்பட்ட முறையிலும் பேசி விரைவில் தீர்வு காண்பதாக அப்போதைய மனிதவள அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், இடையில் தற்போதைய ஒற்றுமை அரசாங்க அமைச்சரவையில் இடம்பெற்ற மாற்றத்தின்போது, சம்பந்தப்பட்ட அமைச்சர் மாற்றப்பட்டு மனிதவளத் துறைக்கு வேறொருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இருந்தபோதும், மாற்றுத் தொழிலாளர்களுக்கான கோரிக்கை, புதிய அமைச்சர்மூலமும் முன்னெடுக்கப்பட்டது.

ஆனால், இதுவரை ஒன்றும் கைக்கூடவில்லை. உணவக உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்தான் தொடர்கதை ஆகிறது.

இந்த நிலையில், மனித வள அமைச்சகத்திடம் இதுவரை இருந்துவந்த வெளி நாட்டுத் தொழிலாளர் பிரிவு இப்பொழுது உள்துறை அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உணவக உரிமையாளர்களின் மீட்சிக்காகவும் தொழிலாளர் பற்றாக்குறைச் சிக்கலைக் களைவதற்காகவும் தொடர்ந்து பாடுபடப்போவதாக உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் டத்தோ சுரேஷ் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்தார்.

செயபாளர் என். சண்முகம் வரவேற்புரையுடன் தொடங்கிய நிகழ்ச்சி மாலை 7:00 மணியளவில் நிறைவு பெற்றது.

தாமரைக் குழுமத்தின் தலைவர் டான்ஸ்ரீ ரெனா. துரை சிங்கம் பிள்ளை, இயக்குநர் டத்தோ ரெனா. இராமலிங்கம் பிள்ளை ஆகியோர் சிறப்பாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், மலேசிய இந்திய வர்த்தக தொழிற்சங்க சம்மேளன(மைக்கி)த் தலைவரும் மலேசிய தேசிய வர்த்தக சங்கத் தலைவருமான டத்தோஸ்ரீ ந.கோபால கிருஷ்ணன சிறப்புரை ஆற்றினார்.