சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர் கடத்திய யானை தந்தங்கள் பறிமுதல்
Share
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் யானை தந்தம் கடத்தல் விவகாரத்தில், சிக்கி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் விலங்குகள் சம்பந்தமான விலை உயர்ந்த பொருட்கள் கடத்தப்படுவது அவப்பொழுது நடைபெற்று வருகிறது. யானை தந்தம், மான் கொம்பு, விலங்குகளின் தோல், விலங்குகளின் பற்கள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதால், அதனை தடுக்க தமிழ்நாடு வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்ற கடத்தல் சம்பவங்களில் ஈடுபடும், கடத்தல் கும்பல்களை தொடர்ந்து கண்காணித்து, கடத்தல் சம்பவங்களை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் யானைத்தந்தம் கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்த நிலையில், தமிழ்நாடு வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவினரும், தாம்பரம் வனச்சரக அலுவலகமும் இணைந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில் சென்னை கிறிஸ்தவ கல்லூரி அருகே நான்கு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு யானை தந்தங்களை கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களில் ஒன்று ஆண் யானை உடையதும், மற்றொரு யானை பெண் யானையுடையது என தெரிய வந்தது. கைப்பற்றப்பட்ட யானை தந்தங்கள் முழுமையாக வளர்ந்த யானையுடையது இல்லை எனவும், அவை ஒரு அடி அளவு கொண்ட யானைத் தந்தம் எனவும் விசாரணையில் தெரிய வந்தது. நான்கு பேரை கைது செய்த வனத்துறையினர் மற்றும் போலீசார் நான்கு பேரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில், யானை தந்தத்தை வாங்கி கைமாற்றி விடும் வேலையை தான் நான்கு பேரும் செய்து வந்தனர் என தெரிய வந்தது. மேலும், விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியாற்றிய தற்காலிக ஊழியரான அப்பு (எ) சதீஷ் என்பவரிடம் இருந்து தந்தங்கள் கிடைத்ததாக பிடிபட்டவர்கள் தெரிவித்ததாகவும், வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள யானைத் தந்தங்களை சதீஷ் திருடிச் சென்றிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். தொடர்ந்து வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகத்தினரை உஷார் படுத்தினர். வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில் எந்தவித யானை தந்தமும் திருடு போகவில்லை என தெரியவந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சதீஷ் திடீரென தலைமறைவானது, மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள சதீஷை கைது செய்ய வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது: தாம்பரம் அருகே இரண்டு யானை தந்தங்கள் பிடிபட்டிருக்கிறது. இதில் கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியாற்றும் சதீஷ் மீது சந்தேகம் எழுந்துள்ளது. பூங்காவில் பணியாற்றிய சதீஷ் தற்போது தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இதுகுறித்து ஆய்வு செய்வதில் உயிரில் பூங்காவில் தந்தம் எதுவும் திருடு போகவில்லை என தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் குழு அமைப்பு, பாதுகாக்கப்பட்ட பொருட்கள் குறித்து மறு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தனர்.