பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைத்த கெஜ்ரிவால்
Share
டில்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சி.பி.ஐ. வழக்கில் டில்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஜூன் 26-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவ்வழக்கில் கடந்த 13-ந்தேதி உச்சநீதிமன்றம் அவரை ஜாமினில் விடுதலை செய்தது. அதே நாளில் அவர் திகார் சிறையில் இருந்து விடுதலை ஆனார். கடந்த 15-ந்தேதி, ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் 48 மணி நேரத்துக்குள் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். மக்கள் தீர்ப்பளிக்காமல் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமரப்போவதில்லை என்று சூளுரைத்த கெஜ்ரிவால் சட்டமன்றத் தேர்தலை வரும் நவம்பர் மாதமே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு, ஒரு மூத்த தலைவர் முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவித்தார். இந்நிலையில் டில்லி துணை நிலை ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார் கெஜ்ரிவால். மதியம் அதிஷி மற்றும் மணீஷ் சிசோடியா உடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் வி.கே சக்சேனாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.