LOADING

Type to search

இந்திய அரசியல்

டில்லியின் புதிய முதலமைச்சர் அதிஷி

Share

டில்லியின் புதிய முதலமைச்சராக கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையாலும், பின்னர் சிபிஐயாலும் கைது செய்யப்பட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து கிட்டத்தட்ட 6 மாத சிறைவாசத்துக்கு பிறகு கடந்த வாரம் விடுதலையானார். முதலமைச்சர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது, ஆவணங்களில் கையெழுத்து போடக்கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்ததால், முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய இருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

இந்நிலையில், நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். மணிஷ் சிசோடியா, கைலாஷ் கெலாட், அதிஷி, துணை சபாநாயகர் ராக்கி பிர்லா மற்றும் சில எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை குறித்து விவாதித்தனர். இதையடுத்து, இன்று மாலை 4 மணியளவில் அரவிந்த் கெஜ்ரிவால் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் எம்எல்ஏக்கள் கூட்டம் காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு புதிய முதலமைச்சர் யார் என்று அறிவிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது. அதன்படி, கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அதிஷி, டில்லியின் அடுத்த முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்