LOADING

Type to search

இந்திய அரசியல்

முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன் – சித்தராமையா

Share

முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் 3.16 ஏக்கர் நிலத்தை, வீட்டுமனை கட்டுவதற்கு பயன்படுத்தியதற்காக மாற்று நிலமாக 14 வீட்டுமனைகளை மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் ஒதுக்கியிருந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.பி.பிரதீப் குமார், டி.ஜே.ஆபிரகாம், மைசூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிநேகமாயி கிருஷ்ணா ஆகியோர் அளித்த மனுக்களின் பேரில், முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடுக்க, அந்த மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி அனுமதி வழங்கினார்.

ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து முதலமைச்சர் சித்தராமையா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கத் தடை இல்லை என்று நீதிபதி நாக பிரசன்னா உத்தரவிட்டு சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்தார். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில், கர்நாடக லோக் ஆயுக்தா மைசூரு மாவட்ட காவல்துறை சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து 3 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே சித்தராமையா முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, “நான் முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன், நான் ஏன் ராஜிநாமா செய்ய வேண்டும்? மத்திய அமைச்சர் குமாரசாமி மீதும் வழக்குகள் உள்ளன. அவர் ராஜிநாமா செய்வாரா? அவர் முதலில் விலகட்டும், பிரதமர் மோடி அவரின் ராஜிநாமாவை ஏற்கட்டும்.” இவ்வாறு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.