LOADING

Type to search

உலக அரசியல்

“இஸ்ரேல் மீதான தாக்குதல் நியாயமானது” – ஈரான் தலைவர் கொமேனி!

Share

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் நியாயமானது என ஈரான் மதத் தலைவர் ஆயத்துல்லா கொமேனி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் 1200 இஸ்ரேலியர்களும், 40,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராகவும், ஹமாஸுக்கு ஆதரவாகவும் அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியது. இதனைத் தொடர்ந்து, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் லெபனான் பொதுமக்கள் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, தெற்கு லெபனானில் நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள மக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது. இதற்கு பதிலடியாக கடந்த 1ம் தேதி இரவு இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை பயன்படுத்தி ஈரான் தாக்கியது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், கடும் கண்டனத்தை தெரிவித்த அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் நியாயமானது என ஈரான் மதத் தலைவர் கொமேனி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: தங்களது நிலத்தை ஆக்கிரமித்து தங்களின் வாழ்வை நாசப்படுத்தியவர்களுக்கு எதிராக போராடும் உரிமை பாலஸ்தீனத்திற்கு உண்டு; பாலஸ்தீனர்களைப் பாதுகாப்பதும், அவர்களுக்கு உதவுவதும் நியாயமானது ; அந்த வகையில் இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் நியாயமானது ; தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்; தற்போது நடத்திய தாக்குதல் என்பது சிறிய தண்டனைதான். இவ்வாறு ஈரானின் மதத் தலைவர் ஆயத்துல்லா கொமேனி தெரிவித்தார்.