‘மாவீரன் இயக்குனருடன் நடிகர் விக்ரம்
Share
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம். சமீபத்தில் இவரது நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘தங்கலான்’ படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து, இவர் தற்போது பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் தனது 62 – வது படமான ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், விக்ரமின் 63-வது படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் ‘விக்ரம் 63′ படத்தை இயக்க உள்ளார்.’மாவீரன்’ படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தயாரிப்பு நிறுவனம் சாந்தி டாக்கீஸ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “இந்த நாட்டின் சிறந்த நடிகருடன் எங்களது 3வது தயாரிப்பை அறிவிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறோம். திரைப் பயணத்தில் மறக்கமுடியாத அனுபவத்தைக் கொடுத்தவரும் பாதையை மாற்றும் படங்களைக் கொடுத்த நடிகருடன் இணைவதை கவுரவமாக கருதுகிறோம். கதை சொல்வதில் மேஜிக் செய்யும் மடோனுடன் இரண்டாவது முறையாக இனணந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.இந்தப் படத்தின் மூலம் உலகளவிலான பார்வையாளர்களின் எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்வோம் என உறுதி அளிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது. மண்டேலா படத்தின் மூலம் சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதை வென்றவர் மடோன் அஸ்வின். இவர் இயக்கிய மாவீரன் திரைப்படமும் ரூ. 90 கோடி வரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.