அமெரிக்காவில் காட்டுத்தீ – 25 பேர் பலி
Share
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு உட்பட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால், பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். விலங்குகள் மற்றும் பறவைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வேறு இடங்களுக்கு செல்லும்படி உத்தரவிடப்பட்டு உள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நீடித்து வரும் காட்டுத்தீயில் சிக்கி 25 பேர் பலியாகி உள்ளனர். 30 பேர் காணாமல் போயுள்ளனர். 12 ஆயிரம் கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்து விட்டன. மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், காட்டுத்தீயின் தீவிரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி பாலிசேட்ஸ், ஈட்டன், கென்னத் மற்றும் ஹர்ஸ்ட் பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 163 சதுர கி.மீ. பரப்பளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனினும், தி பாலிசேட்ஸ் பகுதியில் 17% மற்றும் ஈட்டன் பகுதியில் 35% காட்டுத்தீ நேற்று கட்டுக்குள் வந்துள்ளன என தகவல் தெரிவிக்கின்றது. இதில், தி பாலிசேட்ஸ் பகுதியில் 8 பேரும், ஈட்டன் பகுதியில் 17 பேரும் உயிரிழந்து உள்ளனர். எனினும், மொத்த சேத மதிப்பு பற்றிய விவரங்கள் பின்னர் மதிப்பிடப்படும். ரூ.4.46 லட்சம் கோடி முதல் ரூ.4.89 லட்சம் கோடி வரையில் பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளது என முதல்கட்ட ஆய்வில் மதிப்பிடப்பட்டு உள்ளது. காட்டுத்தீயால் கலிபோர்னியாவில் பேரிடர் ஏற்பட்டு உள்ளது என அதிபர் பைடன் அறிவித்து உள்ளார். காட்டுத்தீயால் ஹாலிவுட் பிரபலங்களான ஆடம் பிராடி, லெய்டன் மீஸ்டர், பெர்கீ, அன்னா பாரிஸ், அந்தோணி ஹாப்கின்ஸ் மற்றும் ஜான் குட்மேன் உள்ளிட்டோர் அவர்களுடைய வீடுகளை இழந்துள்ளனர்.