அகதிக் கோரிக்கையாளர்களை விட அனுபவம் உள்ள தொழில்சார் வல்லுனர்களையே கனடிய தேசம் உடனடியாக வரவேற்கின்றது
Share
கடந்த காலங்களில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக கனடா தேசமானது அகதிக்கோரிக்கையாளர்களை அதிகளவில் தனது நாட்டுக்குள் அனுமதித்தது. அனால் தற்போது கனடா முழுவதிலும் தொழில்சார் வல்லுனர்களுக்கு அதிகளவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன் சாதாரண தொழிலாளர்களும் விவசாயத் தொழிலாளர்களும் பல மாகாணங்களில் தேவைப்படுகின்றார்கள். எனவே. அகதிக் கோரிக்கையாளர்களை விட அனுபவம் உள்ள தொழில்சார் வெளிநாட்டவர்களையே கனடா உடனடியாக நாட்டிற்குள் வரவேற்கின்றது
கனடா மற்ற பெரிய நாடுகளைவிட திறமையான புலம்பெயர்ந்தோரை வரவேற்பதோடு மட்டுமின்றி, தங்கள் தங்கள் நாடுகளில் பல்வேறு அடக்குமுறைகளினால் பாதிக்கப்பட்டு அங்கிருந்து வெளியேறத்துடிக்கும் மக்களையும் அகதிகள் என்ற அடிப்படையில் அவர்களை கனடாவில் குடியேறுவதற்கும் வாய்ப்புக்களை அளிக்கும் நாடுகளில் சிறந்த ஒன்றாகவும் விளங்குகின்றது.
இவ்வாறு நேற்று ஒட்டாவா நகரில் இடம்பெற்ற குடிவரவாளர்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில் குடிவரவு ஆலோசகரான வில்லியம்ஸ் ஜோன் என்பவர் தெரிவித்தார்.
கனடாவிற்கு தற்போது அகதிகளாக வர விரும்பும் வெளிநாட்டவர்களை கனடிய குடிவரவுத் திணைக்களம் முன்னரைப்போன்று அனுமதிக்குமா என்று தேசிய ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு பதிலளித்தார்.
அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்
கனடா தேசம் தனது பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்காக எதிர்காலத்திற்கான இலக்குகளை நிர்ணயித்திருந்தாலும், அது எப்போதும் தனது சொந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பதை வரலாறு காட்டுகிறது. 2021ஆம் ஆண்டில், கனடா சுமார் 59,000 அகதிகளை குடியேற்றுவதை இலக்காகக் கொண்டிருந்தது. இது முன்னர் ஏற்றுக்கொண்ட அளவைவிட மூன்று மடங்கு அதிகமாகவே காணப்பட்டது.
எவ்வாறாயினும் 2023ஆம் ஆண்டளவில், 76,000 அகதிகளை குடியேற்ற கனடா தீர்மானத்தை எடுத்துள்ளது.
கனடா 2025ஆம் ஆண்டுக்குள் 15 லட்சம் புலம்பெயர்ந்தோரை அனுமதிப்பதாக இலக்கு நிர்ணயித்துள்ளது.
வயது முதிர்ந்த தலைமுறையினர் தொழிற் சந்தையிலிருந்து விலகிக் கொண்டு வருவதால் அதன் பொருளாதாரத்தில் எஞ்சியிருக்கும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு கனடா குடியேற்றத்தை எதிர்பார்க்கிறது.
ஆனால், இவ்வளவு வெளிநாட்டவர்களின் வருகையை அனைத்து தரப்பினரும் ஒப்புக் கொள்ளவில்லை.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஒவ்வோர் ஆண்டும் இங்கிலாந்தில் குடியேறுகிறவர்கள் எண்ணிக்கையைவிட 8 மடங்கும், அமெரிக்காவில் குடியேறுவோரை விட 4 மடங்கும் என அதிகளவில் கனடாவில் குடியேற்றம் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்
எனினும் பல ஆண்டுகளாக, மக்கள்தொகை மற்றும் பொருளாதாரத்தை வளர்த்துகொள்வதற்காக கனடா குடியுரிமை இல்லாமல் காலவரையறையின்றி நாட்டில் தங்குவதற்கு உரிமையுள்ள நிரந்தர குடியிருப்பாளர்களை ஈர்க்க முயன்று வருகிறது.
கடந்த ஆண்டு, அந்நாடு 405,000 நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்றது. இந்தத் தொகை கனடிய குடிவரவு வரலாற்றில் மிக அதிகமான எண்ணிக்கை. எனவும் கருதப்படுகின்றது.
‘எமது கனடிய தேசம் வளர்ச்சியடைய வேண்டுமானால், புலம்பெயர்ந்தவர்களைக் கொண்டு வர வேண்டும். குடியேற்றம் செயலூக்கம் கொண்ட மக்கள்தொகையின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. எனவும் வில்லியம்ஸ் ஜோன் தெரிவித்தார்.