ரூ. 1 கோடி பரிசு விழுந்த கேரள லாட்டரியுடன் போலீசில் தஞ்சம் புகுந்த தொழிலாளி
Share
கேரளாவில் லாட்டரியில் பெரும் தொகை பரிசாக கிடைத்தால் இப்போது யாரும் தங்களது பெயர் விவரங்களை வெளியிடுவதில்லை. பணம் கேட்டு உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரும் தொல்லை கொடுப்பதுதான் இதற்கு காரணமாகும். கடந்த வருடம் ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ. 25 கோடி முதல் பரிசு கிடைத்த ஆட்டோ டிரைவர் அனூப் இந்த தொல்லைகளுக்கு பயந்து பல மாதம் தலைமுறைவாக வாழும் நிலை ஏற்பட்டது.
இந்த சம்பவத்திற்கு பிறகு லாட்டரியில் முதல் பரிசு கிடைப்பவர்கள் தங்களது பெயர் விவரங்களை வெளியிட வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கேரள லாட்டரியில் முதல் பரிசு ரூ. 1 கோடி கிடைத்த வெளி மாநில தொழிலாளி ஒருவர் உயிருக்கு பயந்து ஓடிச் சென்று போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்த சம்பவம் நடந்துள்ளது.
கேரள அரசின் பிப்டி பிப்டி லாட்டரி குலுக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ. 1 கோடி திருவனந்தபுரத்தில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிர்ஷூ ராபாவுக்கு கிடைத்தது. வாழ்க்கையில் இவ்ளோ பெரிய தொகை தனக்கு கிடைக்கும் என்று ராபா கனவில் கூட நினைத்து பார்த்து இருக்கவில்லை. பரிசு விழுந்த விவரம் தெரிந்தவுடன் அவரது நண்பர்கள் உட்பட பலரும் அவரை சந்திக்க வர தொடங்கினர். நேரம் செல்ல செல்ல ராபாவை பார்க்க வருபவர்களின் கூட்டம் அதிகரித்தது. இதனால் அவருக்கு திடீரென பயம் வரத் தொடங்கியது. பணத்திற்காக தன்னை யாராவது கொலை செய்து விடுவார்களோ என்று அச்சம் ஏற்பட்டது. இதனால் அவர் போலீசின் உதவியை நாட முடிவு செய்தார். உடனே திருவனந்தபுரத்தில் உள்ள தம்பானூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். இன்ஸ்பெக்டரை சந்தித்து லாட்டரியில் ரூ. 1 கோடி பரிசு விழுந்திருப்பதாகவும், டிக்கெட் தன்னிடம் இருப்பதால் பணத்திற்காக யாராவது கொலை செய்து விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து பயப்பட வேண்டாம் என்று ராபாவுக்கு ஆறுதல் கூறிய போலீசார் உடனடியாக வங்கி அதிகாரிகளை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து டிக்கெட்டை அவரிடம் ஒப்படைக்க வைத்தனர். இதன் பிறகு தான் அவருக்கு நிம்மதி ஏற்பட்டது. லாட்டரியில் கிடைக்கும் பணத்தை வீணாக செலவு செய்ய வேண்டாம் என்று அறிவுரை கூறி ராபாவை பின்னர் போலீசார் அனுப்பி வைத்தனர்.













