LOADING

Type to search

இந்திய அரசியல்

நோர்வே கவிஞர் சின்னத்துரை உமாபாலன்

Share

முனைவர் மு. இளங்கோவன்

புதுச்சேரி, இந்தியா

muetamil@gmail.com

[சின்னத்துரை உமாபாலன் இலங்கையில் பிறந்து, தற்பொழுது நோர்வேயில் வாழ்ந்துவருபவர். கவிஞர், எழுத்தாளர், செயற்பாட்டாளர் என அறியப்படுபவர். “நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள்” என்னும் இவரின் நூல் நோர்வேயில் தமிழர்கள் கால் பதித்த காலம் முதல் இன்று வளர்ந்து நிற்கும் நிலை வரையிலான அரிய தகவல்களைக் கொண்டுள்ளது. தமிழ் மரபுக் கவிதையிலும் ஆழ்ந்த புலமையுடையவர். நோர்வே நகர அவையில் தொழில்நுட்பவியலராகப் பணியாற்றி வருகின்றார்]

2017 ஆம் ஆண்டு சூன் திங்களில் நோர்வே நாட்டின் பேர்கன் நகரில் நடைபெற்ற செம்மொழித் திருநாள் நிகழ்வுக்குப் பேராசிரியர் அ. சண்முதாஸ், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் உள்ளிட்ட அறிஞர்களுடன் சென்றிருந்தபொழுது அண்ணன் கவிஞர் சின்னத்துரை உமாபாலன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. செம்மொழித் திருநாளில் உமாபாலனின் உரையும் சிறப்புரையாக இருந்தது. அவரின் மகளாரின் நாட்டிய நிகழ்வும் அத்திருநாளில் நடைபெற்றது. அனைவரும் உரையைக் கேட்டு மகிழ்ந்தோம். நாட்டியத்தைக் கண்டுகளித்தோம்.

செம்மொழித் திருநாள் நிகழ்வு முடிந்து, டென்மார்க்கு, பின்லாந்து நாடுகளுக்குச் சென்று மீண்டும் நோர்வேயின் ஓசுலோ நகருக்குத் திரும்பிவந்தேன். பொறியாளர் அருள்நிதி இராதாகிருட்டினன் உள்ளிட்ட அன்புள்ளங்களால் ஒருங்கிணைக்கப்பட்ட பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரின் ஆவணப்படத்தை அங்குத் திரையிட்டோம். நோர்வேயில் வாழ்ந்துவரும் கலைஞர்கள், எழுத்தாளர்கள் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டு என் முயற்சியை ஊக்கப்படுத்தினர்; பாராட்டினர். அன்று இரவு உமாபாலன் அண்ணனின் இல்லத்தில் தங்கும் வாய்ப்பும் அவர்களின் குடும்பத்தினருடன் பழகும் வாய்ப்பும் எனக்கு வாய்த்தன. அவர்களுடன் பழகும் பொழுது அன்பும் பண்பும் ஒருங்கிணைந்த அரிய குடும்பமாக அவரின் குடும்பம் விளங்குவதை அறிந்து உவகையுற்றேன்.

ஓசுலோ நகரிலும் ஒட்டியுள்ள பகுதிகளிலும் இருக்கும் காட்சியகங்கள், பொழுதுபோக்கு இடங்களுக்கு அண்ணனும் அவர்களின் மகளாரும் அழைத்துச் சென்று காட்டினர். அண்ணன் உமாபாலன் அலுவலகத்திற்கும் அருகில் உள்ள புல்வெளிப் பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டமை ஆண்டுகள் பலவானாலும் நெஞ்சில் நிலைபெற்றிருக்கும் நினைவுகளாகும்.

உமாபாலன் அவர்களின் பணிகள் பலதிறத்தனவாக இருப்பினும் நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள் என்னும் அரிய நூலினை அவர் தமிழுலகுக்குத் தந்துள்ளமை போற்றத்தகுந்த பணியாகும். இந்த நூல் 2016 இல் வெளிவந்துள்ளது. நோர்வே வாழ் தமிழர்களின் வரலாற்றுத் தொகுப்பாகவும் ஆவணமாகவும் விளங்கும் இந்த அரிய நூல் 688 பக்கங்களில் பல்துறைச் செய்திகளைத் தாங்கிய களஞ்சியமாகும். வரலாறும் பண்பாடும், பல்துறை முன்னோடிகள், தமிழ் சார்ந்த முயற்சிகள் என்னும் மூன்று பாகங்களாக இந்த நூலின் உள்ளடக்கச் செய்திகள் உள்ளன.

நோர்வேயில் கால்பதித்த முதற்றமிழர்கள், அரசியலாளர்கள், அறியப்பட வேண்டியவர்கள், ஆன்மீகவாதிகள், இசையமைப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள், நடனக் கலைஞர்கள், வாத்தியக் கலைஞர்கள், வாய்ப்பாட்டுக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் குறித்த விவரங்களைப் படத்துடனும் சான்றுகளுடன் வழங்கும் இந்த நூல் தமிழகத்து நூலகங்களில் இடம்பெற வேண்டிய நூலாகும்.

தமிழ்சார்ந்த முயற்சிகள் என்னும் பகுதியில் நோர்வேயில் உள்ள ஆன்மீக அமைப்புகள், இசைக்குழுக்கள், ஊடகங்கள், கல்வி நிறுவனங்கள், தமிழ்ப் பாடசாலைகள், தனியார் அமைப்புகள், பொது அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள், அரங்கேற்றங்கள், நூல்கள், ஒலி-ஒளி வட்டுகள், உச்சப்பத்து என்னும் தலைப்புகளில் நூலில் தந்துள்ள விவரங்களும் குறிப்புகளும் மிகப் பயன்தருவனவாகும்.

சின்னத்துரை உமாபாலன் அவர்களின் தமிழ் சார்ந்த வாழ்வு

சின்னத்துரை உமாபாலன் இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில், மாவிட்டபுரம் என்னும் ஊரினைப் பிறப்பிடமாகக் கொண்டவர். (நல்லை நகர; ஆறுமுக நாவலரின் நேரடி மாணாக்கரான இவரின் பு+ட்டனார் உரையாசிரியர்; ம. க. வேற்பிள்ளை அவர்;கள் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையின் தலைமை ஆசிரியராக இருந்தவர்;.)

மாவிட்டபுரத்தில் வாழ்ந்த சின்னத்துரை – கமலாதேவி ஆகியோரின் மகனாக 23.09.1962. இல் உமாபாலான் பிறந்தவர். ஆரம்பக் கல்வி வீமன்காமம் மகா வித்தியாலயத்திலும். உயர்தரம் – காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியிலும் அமைந்தது. வணிகப் பிரிவில் உயர்தரக் கற்கையை நிறைவுசெய்த உமாபாலன் காங்கேசன்துறைத் துறைமுகத்தில் மேற்பார்வையாளராகக் கடமையாற்றி வந்த காலத்தில் தமிழர்களுக்கெதிரான அரச வன்முறைகளிலிருந்து தப்பிக்கும் முகமாக 1987 இல் நோர்வே நாட்டுக்குப் புலம்பெயர்;ந்தவர்;.

நோர்வேயின் வடதுருவத்தில் 1987 – 1989 வரை ஈராண்டுகள் நோர்வேஜிய மொழி கற்ற இவர், 1989 முதல் 1997ஆம் ஆண்டு வரை போட்ஸ்பியு+ர்;ட் என்னும் ஊரில் உள்ள மீன் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்தவர்;. இக்காலப்பகுதியில் இவ்வூரின் மொத்த மக்கள் தொகையில் தமிழர்;களின் எண்ணிக்கையானது ஏறக்குறைய 12 வீதமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இங்கு வாழ்ந்த தமிழர்;கள் தமிழ்ப்பாடசாலை, தமிழ் வானொலி, தமிழ்ச் சங்கம் எனப் பல வழிகளிலும் தமிழ்ப்பணியாற்றினர்.; அவர்;களில் ஒருவராகத் தமிழ்ப்பணிகளில் ஈடுபட்டுவந்த உமாபாலன் தமிழ்மொழி ஆசிரியராக, வானொலி அறிவிப்பாளராக, போட்ஸ்பியு+ர்;ட் தமிழ்ச்சங்கத் தலைவராகப் பலநிலைகளில் பணியாற்றியவர்;.

வடதுருவ நகரங்களில் இருந்த தமிழர் அமைப்புகளின் கூட்டிணைவில் பின்மார்க் தமிழர்; ஐக்கிய முன்னணி உருவாக அடித்தளமிட்டதுடன் அதன் செயலாளராக ஆரம்பப்பணிபுரிந்த இவர், 1997இல் நோர்;வேயின் தலைநகரான ஒசுலோவுக்கு இடம் பெயர்ந்தவர்;.

1999 ஆம் ஆண்டு சாந்தினியைத் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்துள்ளனர்.

2000 ஆண்டு முதல் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தில் தமிழாசிரியர், கலைப்பணி இணைப்பாளர், லோறன்ஸ்கூக் வளாக நிர்;வாகப் பொறுப்பாளர், றொம்மன் வளாகக் கல்விப் பொறுப்பாளர் எனப் பலவழிகளில் தமிழ்ப்பணியாற்றிய இவர் லோறன்ஸ்கூக் தமிழர்; விளையாட்டுக் கழகத்தின் தலைவராகவும் ஈராண்டுகள் பணியாற்றியவர்;.

கலைநிகழ்வுகளின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக, கவியரங்க, பட்டிமன்றப் பேச்சாளராக, நடுவராக, பாடலாசிரியராகப் பலதளங்களில் செயற்படும் இவர் லோறன்ஸ்கூக் நகரசபையில் தொழில்நுட்பவியலாளராகக் (Operating Technician) கடமையாற்றி வருகின்றார்;.

இலங்கையின் மாவிட்டபுரத்தின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த தமிழ்ப்பெரியவர்கள் பற்றிய குறிப்புகளை மரபுக் கவிதையில் மாவை மான்மியம் என்னும் நூலாக 2011ஆம் ஆண்டு வெளியிட்டவர்;. நோர்வே வாழ் தமிழர்களின் 60 ஆண்டுகால வரலாற்றைத் தமிழில் நோர்;வேயில் வேர்விட்ட விழுதுகள் எனவும், நோர்வேயிய மொழியில் Tamilenes liv og historie I Norge எனவும் தலைப்பமைத்து, 2016இ;ல் வெளியிட்ட பெருமைக்குரியவர்;. இலங்கையில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் அருகேயே இவர்தம் வீடு உள்ளது. பாரம்பரியச் சைவக்குடும்பத்தில் பிறந்த இவர் தமிழ்ச் சைவம் என்னும் தலைப்பில் ஒரு சில காணொளிகளை வெளியிட்டுள்ளார். தமிழ்ச் சைவம், வாலி காவியம் என இரு கவிதை நூல்களை எழுதிக் கொண்டுள்ளார்.

பாவலர் மா. வரதராசனாரின் முகநூற் குழுவான பைந்தமிழ்ச் சோலையின் இணையவழியிலான மரபுப்பாக் கற்கைவழிப் பாவலர்; பட்டத் தேர்;வில் பங்கேற்றுப் பைந்தமிழ்ச் செம்மல், வண்ணப்பாத் தேர்;வில் பங்கேற்று வண்ணப் பாவரசு என்னும் பட்டங்களைப் பெற்றவர்.

அன்பும் அறிவுருவுமாக விளங்கும் கவிஞர் உமாபாலன் போன்றவர்களின் தமிழ்ப்பணிகள் தமிழகத்து மக்களுக்கு அறிமுகம் ஆதல் வேண்டும். அவரின் பணிகளுக்கு உரிய மதிப்பும் சிறப்பும் அளிக்கப்படுதல் காலத் தேவையாகும். தமிழ்நாட்டரசின் தமிழ் வளர்ச்சித்துறை இவரைப் போலும் உண்மைத் தமிழ்த்தொண்டர்களைப் போற்றுதல் வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர் மாநாடுகளில் போற்றப்பட வேண்டிய தமிழ் ஆளுமை உமாபாலன் ஆவார்.