கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணின் விவரம் வெளியீடு: முன்னாள் டிஜிபி மீது வழக்கு பதிவு செய்ய கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு
Share
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சூரியநெல்லி பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை கடந்த 1996 ம் ஆண்டு திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடைய காதலன் கடத்திச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்தது. அப்போது 40 நாளில் மாணவியை 37 பேர் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக தர்மராஜன் என்பவர் உட்பட 42 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் ராஜ்யசபை துணைத் தலைவருமான பி. ஜே. குரியனின் பெயரும் அடிபட்டது. இந்த நிலையில் கேரள முன்னாள் டிஜிபியான சி.பி. மேத்யூஸ் கடந்த 2017 ம் ஆண்டு நிர்பயம் என்ற பெயரில் தனது போலீஸ் அனுபவங்கள் குறித்து எழுதிய புத்தகத்தை வெளியிட்டார்.
புத்தகத்தில் சூரியநெல்லி மாணவி குறித்த விவரங்களை அவர் வெளியிட்டிருந்தார். அதில் மாணவியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. என்ற போதிலும் அவருடைய பெற்றோர், ஊரின் பெயர்
தெரிவிக்கப்பட்டி ருந்தது. பாலியல் குற்றங்களில் பாதிக்கப்படுபவர்களை அடையாளம் கண்டுபிடிக்கும் வகையில் விவரங்களை வெளியிடுவது சட்டப்படி குற்றம் என்பதால், இது தொடர்பாக சிபி மேத்யூஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 2019 ம் ஆண்டு ஜோஸ்வா என்ற போலீஸ் அதிகாரி திருவனந்தபுரம் மாவட்ட எஸ்பிக்கு புகார் கொடுத்தார்.
ஆனால், அந்தப் புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து ஜோஸ்வா கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து ஜோஸ்வா மீண்டும் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி முன்னாள் டிஜிபி சி.பி. மேத்யூஸ் மீது வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட்டார்.