ஓமனில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்தது – 16பேர் மாயம்
Share
ஓமன் நாட்டில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 இந்தியர்கள் உட்பட 16பேர் மாயமான நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓமன் நாட்டின் தென்மேற்கு கடற்கரையில் டுகும் எனும் துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகமானது நாட்டின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு சுரங்கத் திட்டங்களின் மையமாகி இருந்து வருகிறது. இந்த துறைமுகத்தின் ஒரு பகுதியாக பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ‘பிரெஸ்டீஜ் பால்கன்’ எனும் கொமொரோஸின் கொடி தாங்கிய எண்ணெய் கப்பலானது ஏடன் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஏற்பட்ட திடீர் விபத்தில் கப்பல் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்த 16 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் 13 இந்தியர்களும், இலங்கையை சேர்ந்த மூன்று பேரும் அடக்கம். எண்ணெய் டேங்கர் ஓமன் கடற்கரையில் கவிழ்ந்ததாக அந்நாட்டின் கடல் பாதுகாப்பு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணி மற்றும் மீட்பு நடவடிக்கைகள் துரிதப்பட்டுள்ளன. இந்த கப்பல் 117 மீட்டர் நீளத்துடன் எண்ணெய் பொருட்களை ஏற்றி செல்ல கூடிய வகையில் 2007-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்தில் எண்ணெய் டேங்கர் மூழ்கி, தலைகீழாக இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கப்பல் நிலைபெற்றதா அல்லது எண்ணெய் பொருட்கள் கடலில் கசிகிறதா என்பது இதுவரை உறுதிப்படுத்தவில்லை ஓமனின் கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.