LOADING

Type to search

இந்திய அரசியல்

“அண்ணாமலை விரக்தியில் பேசி வருகிறார்” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Share

”அண்ணாமலை விரக்தியில் பேசி வருகிறார்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக நிர்வாகிகள் இடையேயான மோதல் நாளுக்கு நாள் முற்றி வருகிறது. எடப்பாடி பழனிசாமி குறித்து அண்ணாமலை பேசியதற்கு அக்கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. கருணாநிதியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அண்ணாமலையாலும் முடியாது. ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் அண்ணாமலையால் அதிமுகவை அழிக்க முடியாது. அண்ணாமலை விரக்தியில் பேசி வருகிறார். ஒரு பக்கம் அண்ணாமலை லண்டன் செல்கிறார், இன்னொரு பக்கம் ஸ்டாலின் அமெரிக்கா செல்கிறார். இருவரும் என்ன பேசிக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. அண்ணாமலை ஒரு கட்சியின் மேலாளர். அவர் ஒரு கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசுகிறார். பாஜகவுக்கு ஆட்சி என்பது ஒரு பகல் கனவு தான். பாஜகவால் ஒரு எம்.எல்.ஏ சீட் கூட வெல்ல முடியாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்தை வைத்து துரைமுருகனை மட்டம் தட்டியுள்ளார். துரைமுருகன் ரஜினிகாந்தை மட்டம் தட்டியுள்ளார். ஸ்டாலினால் முன்மொழியப்பட்டதை ரஜினிகாந்த் பேசியுள்ளார். அதனை உதயநிதி வழிமொழிந்துள்ளார். பரட்ட பத்த வச்சிட்டியே பரட்ட என்பதைப் போல ரஜினிகாந்த் பேசியது திமுகவில் புகைந்து கொண்டிருக்கிறது. அது எப்போது எரிமலை போல் வெடிக்கும் என்று தெரியாது.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். தமிழக மீனவர்களின் 264 படகுகள் இலங்கை வசம் உள்ளன. தமிழக மீனவர்கள் 34 பேர் இலங்கை சிறைகளில் உள்ளனர். மீனவர்களை மீட்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? சிறு தொழிலை காப்பாற்ற முதல்வர் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு பற்றி எரிகிறது. போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. அதையெல்லாம் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் அமெரிக்கா செல்கிறார். இதற்கு முன்பு ஜப்பான் சென்ற மு.க.ஸ்டாலின் என்ன முதலீட்டை கொண்டு வந்தார்? வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்”. இவ்வாறு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.