LOADING

Type to search

உலக அரசியல்

பிரேசிலில் ‘எக்ஸ்’ தளத்திற்கு தடை – உச்சநீதிமன்றம்

Share

பிரேசில் நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் லூலா டா சில்வா வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தேர்தலில் தோல்வியடைந்த தீவிர வலதுசாரி முன்னாள் அதிபர் போல்சனாரோ, அந்நாட்டின் தேர்தல் நடைமுறை மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதனிடையே தேர்தலில் வெற்றி பெற்ற லுலா டா சில்வா அதிபராக பதவியேற்பதை தடுக்க போல்சனாரோ சதிச்செயலில் ஈடுபட்டாரா என பிரேசில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதே சமயம், சமூக வலைதளமான ‘எக்ஸ்’ தளத்தில் ஏற்கனவே முடக்கப்பட்டிருந்த பல்வேறு கணக்குகளை எலான் மஸ்க் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டார் என பிரேசில் நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்சாண்டிரே டிமொரேஸ் குற்றம் சாட்டினார். மறுபுறம், பிரேசிலில் பேச்சு சுதந்திரம் முடக்கப்படுவதாக எலான் மஸ்க் விமர்சித்தார். அதோடு, பிரேசிலில் ‘எக்ஸ்’ தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள ‘எக்ஸ்’ அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார். இருப்பினும் பிரேசிலில் ‘எக்ஸ்’ சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் பிரேசில் உச்சநீதிமன்றத்தில் ‘எக்ஸ்’ தளத்தில் கட்டுப்பாடின்றி தகவல்கள் வெளியாவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சாண்டிரே டிமொரேஸ், பிரேசில் நாட்டில் ‘எக்ஸ்’ தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும் என்றும், தவறினால் பிரேசிலில் ‘எக்ஸ்’ தளம் முடக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.

ஆனால் இந்த உத்தரவை ஏற்க முடியாது என்று எலான் மஸ்க் திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த நிலையில், பிரேசில் நாட்டில் ‘எக்ஸ்’ தளத்திற்கு தற்காலிக தடை விதித்து பிரேசில் உச்சநீதிமன்ற அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதன்படி 24 மணி நேரத்திற்குள் ‘எக்ஸ்’ தளத்தை பிரேசில் நாட்டிலிருந்து முடக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தேசிய தகவல் தொடர்பு நிறுவனத்திற்கு நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டிமொரேஸ் உத்தரவிட்டார்.