LOADING

Type to search

உலக அரசியல்

நிவாரண முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 19 பேர் உயிரிழப்பு

Share

காஸா போரால் இடம்பெயா்ந்த பாலஸ்தீனியா்களுக்கான நிவாரண முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 19 போ் உயிரிழந்தனா்; 60 போ் காயமடைந்ததனா். துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்கள் மூலம் முக்கிய ஹமாஸ் படையினரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே நடைபெறும் போரில், காஸா கடலோரப் பகுதியில் உள்ள முவாசி பகுதியை பாதுகாப்பு மண்டலமாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அதையடுத்து, அந்தப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு அகதிகள் நெரிசலான கூடார முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், முவாசி நிவாரண முகாம் மீது இஸ்ரேல் திங்கள்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது. இதில் 19 போ் உயிரிழந்ததை காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது. தாக்குதல் பகுதியில் தொடா்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்றுவருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அமைச்சகம் கூறியது.இதற்கு முன்னா் ஹமாஸ் அரசின் கீழ் இயங்கும் சிவில் பாதுகாப்புத் துறை வெளியிட்டிருந்த அறிக்கையில், முவாசி தாக்குதலில் 40 போ் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும், இந்த எண்ணிக்கையை இஸ்ரேல் இராணுவம் மறுத்தது.தற்போது 19 போ் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ள காஸா சுகாதாரத் துறை அமைச்சகமும் ஹமாஸ் அரசின் ஓா் அங்கம்தான். ஆனால் அந்த அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்று பரவலாகக் கருதப்படுகின்றன.

காஸா சம்பவங்கள் குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிடும் புள்ளிவிவரங்களுடன் நடுநிலை ஆய்வாளா்கள், ஐநா, இஸ்ரேலிய ராணுவம் ஆகியவை வெளியிடும் புள்ள புள்ளிவிவரங்கள் ஒத்துப்போவது குறிப்பிடத்தக்கது.ஹமாஸ் கட்டளையகம்: முவாசி பகுதியில் செயல்பட்டுவந்த ஹமாஸ் படையினரின் கட்டளையகத்தைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. கடந்த அக். 7-ஆம் தேதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடா்புடைய மூன்று முக்கிய ஹமாஸ் படையினா் இந்த குண்டுவீச்சில் கொல்லப்பட்டதாக ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்துள்ளது.இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஸாவில் கடந்த 24 மணி நேரமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 32 போ் உயிரிழந்தனா்; சுமாா் 100 போ் காயமடைந்தனா். இத்துடன், இந்தப் பகுதியில் கடந்த அக். 7 முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 41,020-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 94,925 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.