மோடி மீது வெறுப்பில்லையென ராகுல் காந்தி கூறியுள்ளார்
Share
பிரதமர் மோடி மீது எனக்கு வெறுப்பு இல்லை. அவரது கருத்துகளைதான் எதிர்க்கிறேன் என்று அமெரிக்காவில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். அமெரிக்காவில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் கலந்துகொண்டு, அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.
வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் கடந்த 9-ம் தேதி நடைபெற்ற நேர்காணலில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது, இந்திய அரசியல் தொடர்பாக பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தார். அங்கு, மாணவர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது: நான் ஒரு உண்மையை சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். பிரதமர் மோடியை உண்மையில் நான் வெறுக்கவில்லை.
அவர் மீது எனக்கு எந்த வெறுப்பு உணர்வும் இல்லை. அவரது கருத்துகளை மட்டுமே எதிர்க்கிறேன். எந்த விஷயத்திலும் அவருக்கென ஒரு கண்ணோட்டம் உள்ளது. எனக்கென ஒரு கண்ணோட்டம் உள்ளது. உண்மையில், அவர் மீது எனக்கு அனுதாபம்தான் ஏற்படுகிறது. 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பு மக்களிடம் நிலவிய அச்ச உணர்வு தற்போது மறைந்துவிட்டது. 56 இஞ்ச் மார்பு கொண்டவர், கடவுளுடன் நேரடி தொடர்பு உள்ளவர், பிரதமர் மோடியின் கருத்துகள் என்ற பேச்செல்லாம் பழைய கதையாக மாறிவிட்டது.
இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாததுதான் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. மேற்கத்திய நாடுகளிலும் இப்பிரச்சினை இருக்கிறது. ஆனால், சீனா, வியட்நாம் என உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்த பிரச்சினை இல்லை. இந்த பூமியில் வேலைவாய்ப்பு பிரச்சினை இல்லாத பகுதிகளும் உள்ளன. முன்பு அமெரிக்கா உலக உற்பத்தியின் மையமாக இருந்தது. பின்னர் கொரியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் உற்பத்தி மையங்களாக மாறின. தற்போது உலக அளவில் உற்பத்தி மைய மாக சீனா பிரதிநிதித்துவம் பெற்று முன்னிலையில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
பாஜக கண்டனம்: இந்த நிலையில், வெளிநாடுகளில் இந்தியாவின் தரத்தை குறைக்கும் வகையில் ராகுல் காந்தி பேசி வருவதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா நேற்று கூறும்போது, ”வெளிநாடுகளில் இந்தியா குறித்து தரக்குறைவாக பேசி வருகிறார் ராகுல் காந்தி. அவர் முதிர்ச்சியற்ற, பகுதிநேர அரசியல்வாதி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் என்ற பெரும் பொறுப்பை அவரது தோள்களில் மக்கள் சுமத்தியுள்ள னர். இந்திய ஜனநாயகத்தில் ராகுல் காந்தி ஒரு கரும்புள்ளி என்று சொல்வதற்கு வருத்தமாக இருக்கிறது. வெளிநாட்டுக்கு சென்றால் என்ன பேசுவது என்று கூட அவருக்கு தெரிவது இல்லை” என்றார்.